Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maguda Vairam
Maguda Vairam
Maguda Vairam
Ebook371 pages2 hours

Maguda Vairam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சரித்திர நாவல்களின் எண்ணிக்கை பெரிதும் குறைந்து வரும் காலம் இது. முன்பெல்லாம் பத்திரிகைகள் வாரந்தோறும் ஒரு சரித்திரத் தொடர் இருக்குமாறு பார்த்துக் கொள்வதுண்டு. இப்போது சரித்திர நாவல் பத்திரிகைகளில் தொடராக இடம்பெறுவது அபூர்வமாகிவிட்டது.

கல்கியின் சரித்திர நாவல்களில் நம் முகத்தில் மெல்லிய முறுவலைத் தோற்றுவிக்கும் வகையிலான இனிய நகைச்சுவை நாவலெங்கும் நூலிழையாய் ஓடிக்கொண்டேயிருக்கும். இந்த மகுட வைரம் நாவலிலும் ஆங்காங்கே நகைச்சுவை தென்படுவதை இரசிக்கமுடிகிறது.

நாவலை முழுவதும் வாசித்து முடிக்கும்போது நம் மனத்தில் பழைய காலச் சரித்திரம் ஒன்றை முழுமையாய் அறிந்துகொண்ட மனநிறைவு ஏற்படுகிறது. தம் கடின உழைப்பாலும் ஆய்வு மனப்பான்மையாலும் உயர்ந்த கருத்துகளைச் சொல்லவேண்டும் என்ற வேட்கையாலும் விறுவிறுப்புக் குன்றாத நடையாலும் சரித்திர நாவல் துறையில் தடம் பதிக்கிறார் விஷ்வக்ஸேனன். சரித்திர நாவல்களே அருகியுள்ள இன்றைய சூழலில் இவரது பணி போற்றுதலுக்குரியது என்பதில் ஐயமில்லை.

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580178110987
Maguda Vairam

Related to Maguda Vairam

Related ebooks

Related categories

Reviews for Maguda Vairam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maguda Vairam - Vishwak Senan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மகுட வைரம்

    Maguda Vairam

    Author:

    விஷ்வக்ஸேனன்

    Vishwak Senan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vishwak-senan

    பொருளடக்கம்

    (அணிந்துரை)

    முன்னுரை

    01. பொன்னாரம்

    02. விக்கிரம வரையன்

    03. போர் வாள்

    04. போலித் துறவி

    05. வரகுணன் திட்டம்

    06. முத்துக் களவு

    07. மகாராணி ரேவாதேவி

    08. புல்லே போதுமானது!

    09. விஷ்ணு சித்தர்

    10. இந்திர ஜாலம் - சந்திர காந்தம்

    11. நெருங்கும் அபாயம்!

    12. மாதுலர் மயக்கம், வீரர் தயக்கம்

    13. சித்திரமேழி மல்லன்

    14. இளைய வீரன்

    15. உன்னால் முடியாது மன்னா!

    16. விஷ்ணுசித்தர் விசாரணை

    17. வாரணாவதைப் படலம்

    18. உனக்கு இரங்காவிடில்...

    19. நிகழ்ந்தது விபரீதம்

    20. அர்ச்சுன சந்நியாசி

    21. மலையேறிய தமிழ்

    22. வேழனுக்குச் சோதனை

    23. வேழன் தலைமை

    24. வாழ்வின் போக்கு

    25. அழகர் சித்தம்

    26. உறவு என்பது...

    27. தாமதமேன் ஸ்வாமி...?

    28. நந்திவர்மன் நாடகம்

    29. ஸாரதி வாக்கு

    30. பாலுக்கும் காவல்...

    31. காத்திருந்த வழக்கு

    32. தர்க்க சாத்திரம்

    33. ஒரு சந்திப்பு - ஒரு வழக்கு

    34. சிலையாக்கிய சிலை

    35. குற்றங்கள் மூன்று

    36. போர் நாடகம்

    37. கடன் தீர்த்த பல்லவன்

    38. வைகுந்தன் அருள்!

    போற்றுதற்குரிய இலக்கியப் பணி...

    (அணிந்துரை)

    டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன்

    சரித்திர நாவல்களின் எண்ணிக்கை பெரிதும் குறைந்து வரும் காலம் இது. முன்பெல்லாம் பத்திரிகைகள் வாரந்தோறும் ஒரு சரித்திரத் தொடர் இருக்குமாறு பார்த்துக் கொள்வதுண்டு. இப்போது சரித்திர நாவல் பத்திரிகைகளில் தொடராக இடம்பெறுவது அபூர்வமாகிவிட்டது.

    அன்று மக்கள், வரலாற்றை விரும்பி வாசித்தார்கள். பழைய உன்னதங்களை அசைபோடுவதில் அன்றைய வாசகர்களுக்கு மிகுந்த சுவாரஸ்யம் இருந்தது. பாத்திரங்கள் பேசும் இலக்கணத் தமிழிலும் கோட்டை கொத்தள விவரிப்புகளிலும் பழைய போர் நிகழ்ச்சிகளின் சித்தரிப்பிலும் தமிழ்நயம் செறிந்த வர்ணனைகளிலும் அவர்கள் மனம் பறிகொடுத்தார்கள். வரலாற்றுப் புதினங்களை வாசிப்பதற்கென்றே ஒரு தனி வாசகர் கூட்டம் உருவாகியது. அப்படிப்பட்ட வாசகர் கூட்டத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு எழுத்தாளர் கல்கிக்கு உண்டு.

    கல்கி, சரித்திரப் படைப்பிலக்கியத்திற்கு ஓர் அந்தஸ்தை ஏற்படுத்தினார். அவரது பிரம்மாண்டமான நாவலான ‘பொன்னியின் செல்வன்’ பல்லாயிரக்கணக்கான மக்களைப் பித்துப்பிடித்து வாசிக்க வைத்தது. அவரைத் தொடர்ந்து சாண்டியல்யன், ஜெகசிற்பியன், அகிலன், அரு.ராமநாதன், நா.பார்த்தசாரதி, விக்கிரமன், கோவி மணிசேகரன், ஸ்ரீவேணுகோபாலன், அய்க்கண் என்று இன்னும் பலர் சரித்திரப் படைப்பிலக்கியத் துறையில் ஈடுபட்டார்கள். இவர்கள் எல்லோருமே சமூக நாவல்களையும் எழுதினார்கள்.

    சாண்டில்யன் சமூக நாவல்களை அதிகம் எழுதவில்லை என்றாலும் கூட அவர் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய நங்கூரம் பேசப்பட்டதும்.

    ஆனால் சமூக நாவல் எழுதியவர்களில் சாதனை படைத்த சிலர் சரித்திர நாவல்களின் பக்கம் தலைவைத்துக் கூடப் படுக்கவில்லை. அவர்களில் ஒரு சிலர் அது தங்கள் துறையல்ல என்று விட்டுவிட்டார்கள். வேறு சிலர் அது வளர்க்கப்பட வேண்டிய துறையே அல்ல என்றும், பொய்யும் புனைசுருட்டும் கலந்தது என்றும் சொல்லி, சரித்திர நாவல் எழுதும் திறனில்லாத தங்கள் இயலாமையை நியாயப்படுத்த முனைந்தார்கள்.

    கண்ணதாசனின் ‘சேரமான் காதலி’ சரித்திர நாவலுக்கு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தபோது, இரண்டு விமர்சனங்கள் எழுந்தன. ஒன்று, ‘கவிஞரின் கவிதை நூலுக்குத் தராமல் நாவலுக்கா பரிசு தருவது?’ என்பது. இன்னொன்று, ‘போயும் போயும் சரித்திர நாவலுக்கா இலக்கிய அந்தஸ்து கொடுத்துப் பரிசு தருவது?’ என்பது. ஆனால் இந்தத் தாக்குதல்களை எல்லாம் மீறி வரலாற்று நாவல் துறை தனக்கென்றே உரிய வாசகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு தமிழின் ஒரு தனி இலக்கியத் துறையாக நிலைபெற்றது.

    அவ்வப்போது பத்திரிகைகள் சரித்திர நாவல் போட்டி நடத்தி அந்தத் துறையின் வளர்ச்சிக்கு உதவி வருகின்றன. கொஞ்ச காலம் முன்னால் ஆனந்தவிகடன் அத்தகைய ஒரு போட்டி நடத்தி... நா.பார்த்தசாரதி, அகிலன், மு.கருணாநிதி ஆகியோரை நீதிபதிகளாக்கி, மு.மேத்தாவின் ‘சோழநிலா’ நாவலுக்கு முதல் பரிசு தந்தது.

    அண்மையில் மலேசியாவைச் சேர்ந்த டாக்டர் ராமசந்திரன் ஆதரவில் கலைமகள் ஒரு சரித்திர நாவல் போட்டி நடத்தி, மதுரா, கமலப்ரியா ஆகிய எழுத்தாளர்களுக்கு முதல், இரண்டாம் பரிசுகளை வழங்கியது. இப்படி அவ்வப்போது சில பத்திரிகைகள் சரித்திர நாவல் துறையில் கவனம் செலுத்தத்தான் செய்கின்றன. இத்துறையில் கௌதம நீலாம்பரன் போன்ற மிகச் சிலர் இன்றும் உழைத்து வருகிறார்கள். எனினும் அந்தத் துறையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை இப்போது மிகக் குறைந்துவிட்டது.

    இன்று வரலாற்று நாவல்கள் அதிகம் எழுதப்படாமல் போனதன் பின்னணி என்ன? பத்திரிகைகளின் ஆதரவு அதற்கு அதிகமில்லை என்பது மட்டும்தான் காரணமா? எழுதப்பட வேண்டிய வரலாறுகள் எழுதித் தீர்ந்துவிட்டதா?

    அல்ல. சமூக நாவல்களைப் போல் வெறும் கற்பனையில் மட்டும் வரலாற்று நாவலை உருவாக்க இயலாது. அதற்குக் கடினமாக உழைக்க வேண்டும். சில வரலாற்று இடங்களை நேரில் சென்று பார்வையிட வேண்டும். கல்வெட்டுகளை ஆராய வேண்டும். ஏராளமான சரித்திர நூல்களைப் படித்துத் தகவல் சேகரிக்க வேண்டும்.

    அப்படிச் சேகரித்த தகவல்களை எந்தப் பிழையுமில்லாமல் தருவதில் எச்சரிக்கை வேண்டும். தங்குதடையற்ற இலக்கணத் தமிழை எழுதும் வல்லமை இருக்க வேண்டும். அதற்குக் கொஞ்சம் அடிப்படைத் தமிழறிவு அவசியம். இவையெல்லாம் உள்ள எழுத்தாளர்கள்தாம் வரலாற்று நாவல் துறையில் பிரவேசிக்க முடியும். இல்லா விட்டால் புலியைப் பார்த்துச் சூடு போட்டுக் கொண்ட பூனையின் கதைதான்.

    இன்று வரலாற்று நாவல் துறையின் அளவே குறுகிவிட்டது. குறைந்த அளவிலான அந்த வரலாற்றுக்காட்டில் கூட புலிகளைவிட அதிகமாக சூடு போட்டுக் கொண்ட பூனைகளே உலவுகின்றன. பார்ப்பதற்குப் புலிபோல் தோன்றினாலும், உறுமும்போது பல வரிகளின் இடையே வாசகர் செவியில் மியாவ் சப்தம் கேட்டுத்தான் விடுகிறது.

    கல்கியைப் படித்து மனம் பறிகொடுத்த வாசகர்கள் இன்று வரும் சில சரித்திரப் படைப்புகளைப் படித்து அலுப்படைகிறார்கள். நாவலில் உண்மை இருந்தால் சுவாரஸ்யம் இல்லை. சுவாரஸ்யம் இருந்தால் உண்மை இல்லை.

    இத்தகைய சூழலில் வரலாற்று உண்மைகளை வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகச் சொல்வது என்ற முனைப்போடு சரித்திர நாவல் எழுதியிருக்கிறார் விஷ்வக்ஸேனன். தம் வரிகளின் இடையே பூனையின் மியாவ் சப்தம் எங்கும் கேட்டுவிடாமல் நாவல் நெடுகப் புலியாகவே உறுமியிருக்கிறார். எழுத்தில் இருக்கும் தீவிர ஈடுபாடு மட்டுமல்ல, அவரது கடின உழைப்பும் சேர்ந்துதான் இந்தச் சாதனையை நிகழ்த்த உதவியிருக்கிறது.

    தமிழகம் இராஷ்டிரகூடர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் காலத்தைக் களனாகக் கொண்டு இந்நாவலைப் படைத்திருக்கிறார்.

    இயற்கை வர்ணனைகளுக்குக் காப்பியம் போல் படைக்கப் படும் வரலாற்று நாவல்களில் நிறைய இடம் உண்டு. பல புகழ்பெற்ற வரலாற்று நாவலாசிரியர்கள் அழகிய வர்ணனைகளால்தான் வாசகர்கள் மனத்தில் நிரந்தர இடம் பிடித்தார்கள். ‘மகுட வைரம்’ நாவலாசிரியரும் நல்ல வர்ணனையாளராகத் தென்படுகிறார். தற்குறிப்பேற்ற அணி மூலம் பல இடங்களில் எழில் கொஞ்சும் வர்ணனைகளை நிகழ்த்துகிறார்.

    அரசலாற்று வெள்ளப் பிரவாகத்தைக் கரையில் வளர்ந்திருந்த மரங்கள் மறைக்கின்றன. ‘உயர்ந்த பொருட்கள் எப்போதும் சற்று மறைவிலிருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த கரையோரத்து மரங்கள், இருபுறங்களிலும் கவிழ்ந்து பிரவாகத்தை மறைக்க முயன்றன’ என்று தன் கருத்தை ஏற்றிச் சொல்கிறார் எழுத்தாளர்.

    இயற்கை வர்ணனைகளை மட்டுமல்ல, சுரங்கப்பாதைகள், அரண்மனை உட்புற இரகசிய நிலவறைகள் போன்றவற்றையெல்லாம்கூட சுவாரஸ்யம் தோன்றும் வகையில் வர்ணிக்கும் திறன் பெற்றிருக்கிறார்:

    ‘மெல்லிய குளிர்காற்று அறைக்குள் ஊடுருவியது. ஏதோ சக்கரங்கள் சுழல்வதைப் போன்ற கரகரவென்ற ஒலி எழுந்தது. அறையின் நடுவில் தரையில் வரையப்பட்டிருந்த தாமரை வடிவச் சித்திரம் மெல்லச் சுழன்று உயரத் தொடங்கியது. உயர்ந்த பின்பே அது வட்ட வடிவ இருப்புச் சலாகை என்பது புரிந்தது.

    அதை உயர்த்திய தண்டுப்பகுதி ஓர் ஆள் நுழையக்கூடிய உயரம் வந்ததும் நின்று படிகளில் யாரோ ஏறி வரும் ஒலி கேட்டது. தரையிலிருந்து இராஜமாதுலரின் தலை முளைத்து, உயர்ந்து, மேலே ஏறி வந்தார்.’

    வரலாற்றுச் செய்திகளைக் கதையின் விறுவிறுப்புக் கெடாமல் ஆங்காங்கே தகவல் குறிப்புகளாகத் தந்து செல்கிறார். வெறும் பொழுதுபோக்கு நாவலாக மட்டும் தேங்கிவிடாமல் அதையும் தாண்டிப் பல உண்மைகளை வாசகர்களுக்குச் சொல்லும் படைப்பாகவும் இந்நாவல் அமைய இத்தகைய பகுதிகள் உதவுகின்றன.

    ‘மேற்குக் கடற்கரைத் துறைமுகங்களில் வந்து இறங்கும் ரோமானியரும் யவனரும் கிரேக்க வணிகரும் தமிழகத்திற்குள் நுழையும் வழியாக அமைந்திருந்தது அந்த மலைப்பாதை. உயர்ந்து எழுந்து தொடர்ந்த மலைகளின் மீது நெளிந்தும் உயர்ந்தும் தாழ்ந்தும் சென்ற பாதையின் இருபுறங்களிலும் கானகம் அடர்ந்து கிடந்தது.

    திருவெள்ளறை என்றும் வெள்ளலூர் என்றும் அழைக்கப்பட்ட அந்தப் பாதையின் முடிவிலிருந்த ஊரும் கோட்டையும் அயல்நாட்டு வணிகர்கள் தமிழகத்தில் கால் பதிக்கும் முதல் இடமாக அமைந்திருந்தது.’

    சரித்திர நாவல் என்பதே பழைய கலாச்சாரத்தின் உயர்வைப் பேசுவதற்காக எழுதப்படுவதுதான். என்றாலும் பல இடங்களில் வெளிப்படையாக ஆசிரியர் கூற்றாகவே பழம் பெருமைகளை விவரித்துச் செல்கிறார் விஷ்வக்ஸேனன். எடுத்துக்காட்டு:

    ‘அற்புதங்களை நிகழ்த்திய சித்தர்களின் மெய்ஞான அறிவும் விஞ்ஞான அறிவும் தமிழகத்தில் அன்றும் இன்றும் ஏராளம். அவற்றை உலகுக்கு உதவுமாறு அவர்கள் எழுதி வைத்துச் சென்ற சுவடிகளும் ஏராளம். அவநம்பிக்கையாலும் புரிந்து கொள்ளவும் பாதுகாக்கவும் தகுதியுள்ளவர்கள் அற்றுப்போய்விட்டதாலும் அத்தகைய அற்புதங்கள் பல மறைந்து போய்விட்டன.

    பல அயல்நாடுகளுக்குச் சென்று விட்டன. ஏதோ முழுநிலவைத் தரையிலிறக்கி மகாராணியின் தந்தக் கைகளில் வைத்துவிட்டது போல ஒளி வீசிய அந்தக் கல்லும் அத்தகைய அற்புதங்களில் ஒன்றுதான்.’

    பாத்திரங்கள் உரையாடும்போது இடையிடையே என்றும் நிலைபேறுடைய உண்மைகளைப் பேசிச் செல்கிறார்கள். சில வாக்கியங்கள் தனியே சிந்தித்துத் தெளிவடைய வேண்டிய வகையில் பொன்மொழிகளாகவே அமைந்துவிடுகின்றன:

    ‘தேவைகளை உயர்த்திக் கொண்டு வாழ்க்கையின் தரம் உயர்ந்துவிட்டதாக எண்ணுகிறோம். ஆனால் ஒவ்வொரு தேவைக்கும் மனநிம்மதியில் ஒரு பங்கைக் கொடுத்துத்தான் பெறுகிறோம். மனிதன் ஏனோ இதைப் புரிந்து கொள்வதே இல்லை!’

    சில அத்தியாயங்களின் முன்னுரையில் ஆசிரியர் கூற்றாகவே பல உயர்ந்த நீதிக் கருத்துகள் சொல்லப்படுகின்றன:

    ‘ஆத்திரம் அறிவுக்குச் சத்ரு என்று பழமொழி ஒன்றிருக்கிறது. ஆத்திரம் அதிகமாகும்போது மனிதன் பேசும் வார்த்தைகளையோ செயல்களையோ உணர்வதில்லை. பின்னர் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ளும்போது தவறு புரிந்தாலும் அதைப் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வதில்லை.

    அதேபோல்தான் மனிதன் அபிமானம் வைத்திருப்பவர் பழிக்கப்படும்போதோ தாக்கப்படும் போதோ உணர்ச்சி வசப்பட்டுவிடும் மனிதனுக்கும் ஆத்திரக்காரனுக்கும் வேறுபாடே இல்லாமற் போய்விடுகிறது.’

    கல்கியின் சரித்திர நாவல்களில் நம் முகத்தில் மெல்லிய முறுவலைத் தோற்றுவிக்கும் வகையிலான இனிய நகைச்சுவை நாவலெங்கும் நூலிழையாய் ஓடிக் கொண்டே இருக்கும். இந்த மகுட வைரம் நாவலிலும் சில இடங்களில்தான் என்றாலும் ஆங்காங்கே நகைச்சுவை தென்படுவதை இரசிக்க முடிகிறது. எடுத்துக்காட்டு:

    ‘அந்தக் கானகத்தின் துஷ்ட மிருகங்கள் அவ்வப்போது மலைப்பாதைக்கு வந்து தங்கள் ஏகாந்தத்தில் குறுக்கிடும் வணிகர்களை விசாரித்துச் சென்றன. சமயங்களில் தங்களுக்குப் பிடித்தவர்களை உடன் அழைத்துச் செல்லவும் முற்பட்டன. இதனால் மாலைப் பொழுதுக்குப்பின் அந்தப் பாதை வெறிச்சிட்டுக் கிடப்பதே வழக்கமாயிருந்தது.’

    எப்போதும் புராண உதாரணங்களைத் தவறாமல் உதிர்க்கும் பகதத்தன் பாத்திரம்கூட நகைச்சுவைக்கு உதவி புரிகிறது.

    ‘விருஷபர்வ ராஜகுமாரியால் கிணற்றில் சிக்கிக் கொண்ட தேவயானியைப் போல் ஒரு காட்டு மண்டபத்தில் சிக்கிக் கொண்டேன்.’

    ‘இவரது பெருமீசை ஏன் இப்படித் துடிக்கிறது, கடோத்கஜன் கௌரவரைக் கண்டது போல?’

    ‘அந்த வாள் கர்ணனுக்குக் கிடைத்த நாகாஸ்திரம் போல் உன்னிடம் வந்த கதை என்ன?’ - என்றெல்லாம் பொருத்தமான புராண சுவாரஸ்யத்தை மிகுதிப்படுத்துகின்றன. வேல், வாள், வில், கேடயம் போன்ற ஆயுதங்கள் இல்லாமல் அந்தக் காலப் போர் ஏது? போர் இல்லாமல் சரித்திர நாவல்தான் ஏது? ஆயுதத் தயாரிப்பையொட்டிச் சில நுணுக்கமான செய்திகளைச் சொல்கிறார் நாவலாசிரியர்:

    ‘உள்ளே வடிக்கப்படும் ஆயுதங்களை தினமும் மாலையில் இந்தச் சரிவிலிறங்கும் ஆற்றில் கொண்டு வந்து போட்டுக் குளிர வைப்பார்கள். திரும்ப எடுத்துச் செல்ல இரண்டாம் ஜாமம் ஆகிவிடும். ஆயுதங்களுடன் அதிக வீரர்கள் வருவதில்லை. அவர்களைத் தாக்கி அழித்தால் திறந்திருக்கும் வடக்கு வாயில் வழியே நுழைந்துவிடலாம். கோட்டையின் நடுவே ஆயுத சாலை இருக்கிறது. வார்ப்புகளையும் அச்சுகளையும் அழித்துவிட்டு வலப்புறம் நெற்களஞ்சியம் இருக்கிறது. அதற்கும் தீயிட்ட விட்டால் எதிர்ப்பவர்களைக் கொன்றுவிட்டு உடனே திரும்பலாம்.’

    அடிக்குறிப்பு இல்லாமல் சரித்திர நாவலா? நா.பா. போன்றவர்கள் தொடர்கதையாக வந்தபோது இடம்பெற்ற அத்தனை அடிக்குறிப்புகளும் புத்தகமாக வெளிவரும் போதும் இடம்பெற வேண்டும் என்றல்லவா வற்புறுத்தினார்கள்? ‘மகுட வைரம்’ நாவலிலும் ஆங்காங்கே அடிக்குறிப்புகள் உண்டு. நூலின் ஆதாரத்தை உணர்த்தவும் நூலாசிரியரின் படைப்பாற்றலை மட்டுமல்லாமல் படிப்பறிவையும் உணர்த்தவும் இந்த அடிக்குறிப்புகள் துணை நிற்கின்றன.

    சிவகிரி ஆலயம் பற்றிப் பேசும்போது வள்ளியாற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும் காலங்களில் மூழ்கிவிடும் சிவகிரி ஆலயத்தைப் பற்றிய குறிப்பு தி.இராசமாணிக்கனாரின் தென்னக குடைவரைக் கோயில்கள் நூலில் 91ஆம் பக்கத்தில் உள்ளது என்ற அடிக்குறிப்பைத் தர ஆசிரியர் மறக்கவில்லை. ‘சந்திர காந்தக் கல்’ பற்றிக் கூறும்போது ர.சௌரிராஜனின் ‘இந்தியாவின் கலையும் கலாசாரமும்’ என்ற நூலை அடிக்குறிப்பாகக் காட்டுகிறார் நாவலாசிரியர். சிறந்த மொழி பெயர்ப்பாளரான சௌரிராஜன் நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த அடிக்குறிப்பு ஏற்படுத்தத் தவறவில்லை.

    நாவலை முழுவதும் வாசித்து முடிக்கும்போது நம் மனத்தில் பழைய காலச் சரித்திரம் ஒன்றை முழுமையாய் அறிந்து கொண்ட மனநிறைவு ஏற்படுகிறது. தம் கடின உழைப்பாலும் ஆய்வு மனப்பான்மையாலும் உயர்ந்த கருத்துகளைச் சொல்ல வேண்டும் என்ற வேட்கையாலும் விறுவிறுப்புக் குன்றாத நடையாலும் சரித்திர நாவல் துறையில் தடம்பதிக்கிறார் விஷ்வக்ஸேனன்.

    சரித்திர நாவல்களே அருகியுள்ள இன்றைய சூழலில் இவரது பணி போற்றுதற்குரியது என்பதில் ஐயமில்லை.

    டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன், எம்.ஏ., பி.எச்.டி.,

    57.பி. பத்மாவதி நகர்,

    விருகம்பாக்கம், சென்னை - 600 092.

    முன்னுரை

    அமரர் கல்கி தம் எழுத்துக்களால் பலரைப் பரவசப் படுத்தியிருக்கிறார். பலரை அபிமானிகளாக்கியிருக்கிறார். பலரை பக்தர்களாகவும், சிலரை கல்கி பித்தர்களாகவும்கூட ஆக்கியிருக்கிறார். ஆனால் சுபாவத்திலேயே அதீத முரட்டுத்தனமும் முன்கோபமும் கொண்டவரை, பண்படுத்தி நிதானமும் பக்குவமும் அளித்திருக்கிறாரா என்றால், அளித்திருக்கிறார். என்னைப் பண்படுத்தியதோடு மட்டுமின்றி, சிந்திக்கவும், அதை எழுதவும் கற்றுக் கொடுத்திருக்கிறார். தண்ணீரைப் பருகினால் தாகம் அடங்கும். ஆனால் தமிழைப் பருகப் பருக, தாகம் அதிகரிக்கும் என்று உணர வைத்திருக்கிறார்.

    தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய வேண்டுமல்லவா? கல்கியின் புதல்வர் திரு.கி.ராஜேந்திரன் இன்னும் ஒரு படி மேலே போய்விட்டார். என்னை இன்னும் செம்மைப்படுத்திக் கொள்ள வழிகாட்டினார். ஐயா, நான் இருபத்தாறு ஆண்டுகளாகப் பார்த்த அரசாங்க வேலையை விட்டுவிடப் போகிறேன். மேற்கொண்டு என்ன செய்யலாமென ஒரு வழி சொல்லுங்கள் என்றேன். அங்கே வேலையை விட்டதும் நேரே கல்கியில் வந்து சேர்ந்துவிடு. ஆனால் ஒரு நிபந்தனை. வரும்போது ஒரு புதிய சரித்திர நாவலுடன் வா என்றார். கரும்பு தின்னக் கூலி என்பது இதுதான்.

    முழுக்க முழுக்க சோழ நாட்டுக் கிராமமான வண்டாழஞ் சேரியில் பிறந்து, மூன்று தலைமுறைகளுக்கு சோழ மன்னர்களுக்குச் சேவை செய்து, ‘கலிங்கத்துப்பரணி’ கொண்டு, இறுதியில் பெரும் பக்திமானாக, பிறந்த ஊரிலேயே ஆலயம் எழுப்பி மறைந்த கருணாகர பல்லவனுக்கு, ‘பல்லவன்’ என்ற வம்சாவளிப் பட்டத்துக்கான காரணமென்ன என்ற கேள்வியும், குடந்தை ஆராவமுதன் ஆலயத்துச் சிற்பமும் அளித்த ‘மகுட வைரம்’ கதையுடன் ‘கல்கி’யில் வந்து சேர்ந்து கொண்டேன்.

    கல்கியின் காவியங்கள் வந்த பத்திரிகையில் என் எழுத்தும் மூன்றாவது முறையாக வெளிவருகிறதென்ற பெருமையை அளித்ததோடு, கல்கி ஆசிரியர் குழுவில் ஓர் இடமும் அளித்த கல்கி ஆசிரியர் திருமதி சீதா ரவிக்கு, வெறும் ‘உளமார்ந்த நன்றி’ என்பது போதாது. அதை நூறு மடங்காக்கிச் சொல்லக்கூடிய சொல் தமிழில் ஏதேனுமிருந்தால், அதைத் தேடிப்பிடித்துச் சொல்ல வேண்டும்.

    வெட்டுதல், ஒட்டுதல் இன்றித் தொடராக வெளிவர உதவிய உதவி ஆசிரியர்கள் திருமதி அனுராதா சேகருக்கும், திரு.மாறனுக்கும் அதையேதான் அன்புடன் கூறவேண்டும். கதைக்கு உயிரூட்டிய ஓவியர் ஸ்யாமுக்கு மிக்க நன்றி.

    அன்புடன்

    விஷ்வக்ஸேனன்

    01. பொன்னாரம்

    ‘காரார்மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம் நீலமணி வண்ணனான கண்ணன் எழுந்தருளும் திருவிண்ணகரத்து எம்பெருமானைக் காணுமளவும் சுற்றித் திரிவேன்’ என்று சிறிய திருமடலில் திருமங்கை மன்னன் அருளியது, தனக்கும் சேர்த்துத்தான் என்று எண்ணிக் கொண்டதாலோ என்னவோ, அரிசிலாற்றின் வெள்ளம் அந்த விண்ணகருக்கு மாலையாக வளைந்து நெளிந்து, வெகு ஆனந்தத்துடன் சுற்றிப் பிரவாகமாக விரைந்து கொண்டிருந்தது. மாலைக் கதிரவன் அந்த நீர்ப்பரப்பை அசல் பொன்னாகவே அடித்திருந்ததால், தங்கத் தகடுகளாகப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது, அரிசிலாற்று வெள்ளம். உயர்ந்த பொருட்கள் எப்போதும் சற்று மறைவிலிருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த கரையோரத்து மரங்கள், இருபுறங்களிலும் கவிந்து பிரவாகத்தை மறைக்க முயன்றன.

    அந்திக் காற்றில் நிரம்பிக்கிடந்த நெல்லின் மணத்தையும், மரக் கூட்டங்களை நோக்கி ஜிவ்வென்று இறங்கிய பட்சிக் கூட்டங்களின் பெரும் இரைச்சல் செவிகளுக்கு அளித்த இன்பத்தையும் இரசித்தபடியே நடந்து கொண்டிருந்த அந்த வாலிபன், பார்வையை உயர்த்தி கிழக்கிலிருந்து வந்து கொண்டிருந்த மேகக் கூட்டங்களைக் கவனித்தான். அவை விரைவில் பெருமழையைக் கொண்டு வந்துவிடுமென்பதைப் புரிந்து கொண்டதால், தான் குடந்தைக்குச் சென்று பணியை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிவிட வேண்டுமே என்ற எண்ணத்துடன் ஆற்றை ஒட்டியிருந்த பாதையில் விரைந்து நடக்கவும் ஆரம்பித்தான். ஏர் முனையைப் பிடித்துப் பிடித்துக் காய்த்துக் கிடந்த வலிய கரங்களும், அவனது திடமான உடற்கட்டும் ஓயாத உழைப்பைக் காட்டின. உதடுகளின் ஓரத்தில் சரிந்து இறங்கிய மெல்லிய மீசையும், கறுத்துச் சுருண்டு பக்கங்களில் இறங்கிய குழல்களும், அவனை இருபத்து நான்கு பிராயங்களுக்கு மேல் மதிக்க இயலாத தோற்றத்தை அளித்திருந்தன. அதிகக் கூர்மையின்றி நேர்ப்பார்வையாகப் பார்த்த விழிகள் அவன் கல்வியிலோ, கலைகளிலோ அறவே பயிற்சியேதும் பெறவில்லையென்பதை உணர்த்தினாலும், அகன்ற நெற்றியும், பெரும் விழிகளும் ஒரு தனிக்களையை அளித்துக் கொண்டிருந்தன.

    வேகமாக நெருங்கிக் கொண்டிருந்த மேகங்கள், தூரத்தே சரம் சரமாக மழைத்துளிகளை இறக்கத் தொடங்கி விட்டதையும், காற்றில் மண்ணின் மணம் பரவியதையும் கவனித்தவன், இன்னும் அரை நாழிகைக்குள் மழை நெருங்கிவிடும் என்பதைப் புரிந்து கொண்டதால், சற்றுத் தொலைவில் தெரிந்த சாலையோரத்து மண்டபத்தை அடைந்துவிடும் உத்தேசத்துடன் விரைவாக நடந்தான். மண்டபத்தை அவன் நெருங்கவும், சடசடவென்று மழைத்துளிகள் வேகத்துடன் இறங்கவும் சரியாக இருந்தது. மண்டபத்தினுள் நுழைந்து, தலையில் சுற்றிக் கிடந்த துணியை எடுத்து சாரலுக்குப் பாதுகாப்பாகப் போர்த்திக் கொண்டவன், பொழியத் தொடங்கிய மழையை இரசிக்கத் தொடங்கினான். அவன் ரசனை பாதியில் நின்றது.

    சற்றுத் தொலைவில் பாதையில் புரவியொன்று வருவது இலேசாகப் புலப்பட்டது அவனுக்கு. உற்றுக் கவனித்தவனுக்கு, அந்தப் புரவி மீது ஒரு மனிதன் படுத்த நிலையில் சரிந்து கிடப்பதும் புலப்படவே, போர்த்தியிருந்த துணியை விட்டெறிந்து விட்டு, மழையில் பாய்ந்து புரவியை நோக்கி ஓடினான். அருகில் நெருங்கியவன், புரவியின் கயிறுகளைப் பிடித்து, அதை மண்டபத்தின் மறுபுறத்தில் கொண்டு வந்து நிறுத்தினான். முகத்தில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டவன், புரவி மீது கிடந்த மனிதனை நிமிர்த்தவும், புரட்டி அவன் யாரென்பதை அறியவும் முயன்றான். அந்த மனிதனை இலேசாகப் புரட்டியதும், அவனது விலாப்புறத்தில் மழை நீரோடு சேர்ந்து குருதியும் வழிந்து கொண்டிருப்பதைக் கண்ட வாலிபன் திடுக்கிட்டான். அதிகமாகக் குருதி வெளியேறியதால், அந்த மனிதன் சுயநினைவின்றிக் கிடக்கிறான் என்பதையும், அவன் உடைகளும், மறுபுறத்தில் இடையிலிருந்து நீண்ட வாளின் பிடியிலிருந்த இலச்சினையும் அந்த மனிதன் சோழ நாட்டு வீரன் என்பதையும் புரிய வைத்ததால், பதற்றத்துடன் அந்த வீரனின் முகத்தைத் துடைத்ததோடு, மெல்லத் தட்டி அவனை சுயநினைவுக்குக் கொண்டு வரவும் முயன்றான் அந்த வாலிபன். வாலிபனின் சிசுருஷையில் பெரும் பிரயாசையுடன் கண்களை விழித்த அந்த வீரனின் விழிகள், மெல்ல உயர்ந்து வாலிபனை ஏறெடுத்து நோக்கின. அடுத்து அவன் உதடுகளும் பிரிந்து ஏதோ முணுமுணுத்தன.

    அந்த வீரனின் முகத்துக்கருகில் குனிந்து உற்றுக் கேட்ட வாலிபனின் செவிகளில், நீ சோழ நாட்டவன் தானே? என்ற சொற்கள் மெல்ல ஒலித்தன.

    "ஆம் ஐயா,

    Enjoying the preview?
    Page 1 of 1