Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thaayar Sannathi
Thaayar Sannathi
Thaayar Sannathi
Ebook358 pages3 hours

Thaayar Sannathi

By Suka

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறுவயதில் வருடத்துக்கொருமுறை வரும் பொங்கல் வாழ்த்துக்காகக் காத்திருப்போம். வாழ்த்து அட்டையில் நம் பெயர் போட்டு வருகிற பொங்கல் வாழ்த்து அட்டைகள் தந்த சந்தோஷத்தை இப்போது நினைத்தாலும் உணர முடிகிறது. பின் ஓரளவு வயது வந்த பிறகு நம் பெயர் தாங்கி வந்த கடிதங்கள் கூட சிறு வயதில் பொங்கல் வாழ்த்து தந்த உற்சாகத்தைக் கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். விதவிதமான கலர் ஸ்கெட்ச் பேனாக்களால் ஓட்டப்பிடாரம் இளசை அருணா அவர்களின் அழகான கையெழுத்துடன் என் தகப்பனாருக்கு வருகிற கடிதங்களை தபால்காரர் வந்து கொடுக்கவும், அதை ஆசை ஆசையாக வாங்கிப் பார்த்த சிறுவயது நினைவுகளை இன்றைய தலைமுறையினரிடம் பகிர்ந்தால் அவர்களால் அதை ரசிக்கவோ, வியக்கவோ இயலாது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனந்த விகடன், குமுதம் கல்கண்டு(அப்போதெல்லாம் இரண்டையும் சேர்த்துதான் சொல்வார்கள். வாங்குவார்கள்), கல்கி, இதயம் பேசுகிறது, சாவி, குங்குமம், முத்தாரம், பேசும் படம், பொம்மை போன்ற பெரியவர்களுக்கான வார, மாத பத்திரிக்கைகளுக்கிடையே சிறுவர்களுக்கான முத்து காமிக்ஸ் ஒளிந்திருக்கும். எப்போதும் சொப்பனத்தில் வருகிற ‘இரும்புக்கை மாயாவி, உற்ற தோழனாக மனதில் பதிந்த ‘சுட்டிக்குரங்கு’ கபீஷ், நினைத்தாலே அச்சம் கொள்ள வைக்கிற வேட்டைக்காரன் மாத்தையன், பெரியவனானதும் இவரைப் போல்தான் ஆக வேண்டும் என்று மனதுக்குள் சூளுரைக்க வைத்த ‘மந்திரவாதி’ மாண்ட்ரேக், அவருடனேயே வரும் பலசாலி ‘லொதார்’, வியக்க வைத்த ‘ரிப் கெர்பி’, அவரது உதவியாளர் டெஸ்மாண்ட் என பல கதாபாத்திரங்கள் ‘முத்து காமிக்ஸ்’ புத்தகங்களிலிருந்து வெளியே வருவார்கள்.

தொலைக்காட்சி இல்லாத அந்தக் காலத்தில் இவர்களை புத்தகங்களில் மட்டுமே பார்த்து உறவாட முடிந்தது. இன்றைக்கு எல்லாவற்றையும், எல்லோரையும் தொலைக்காட்சியில், இணையதளங்களில் பார்க்க முடிகிறது. முன்பு சொன்ன பத்திரிக்கை பட்டியலில் எஞ்சி நிற்பவை சொற்பம்தான். இணையத்தில் படிப்பவர்கள் பெருகி விட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் இணையத்தில் ‘மட்டுமே’ படிப்பவர்கள் பெருகி விட்டார்கள். ஒரே வீட்டில் வசிப்பவர்கள் கூட பிறந்தநாள் வாழ்த்துகளை ‘ஃபேஸ்புக்’ மூலமாகச் சொல்லிக் கொள்கிறார்கள். அதன் சுவாரஸ்யமும், புதுமையும் அவர்களுக்குப் (அவர்களைப்) பிடித்திருக்கிறது. இணைய இதழ்கள் போக அச்சில் வருகிற செய்தித்தாள்களும், பத்திரிக்கைகளும் கூட இப்போது இணையத்துக்குள் உலவத் துவங்கிவிட்டன.

எனது புத்தகங்களும் இணையத்தில் கிடைப்பதற்கு ‘புஸ்தகா’ நிறுவனத்தினர் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள். ஏற்கனவே எனது ‘உபசாரம்’ புத்தகத்தை இணையத்தில் வெளியிட்டிருக்கிற ‘புஸ்தகா’ நிறுவனம், இப்போது எனது முதல் புத்தகமான ‘தாயார் சன்னதி’யை இணையத்தில் வெளியிடுகிறார்கள். ‘வார்த்தை’ சிற்றிதழிலும், பின் ‘ஆனந்த விகடன்’ இதழிலும் தொடர்ந்து தொடர் எழுதியவன், நான். இவற்றுக்கிடையே நான் அதிகமாக எழுதியது, ‘சொல்வனம்’ மின்னிதழில்தான். ஆக, இணையத்தில் எழுதிய முன் அனுபவம் எனக்குள்ளது. ஆனால் இணையத்தில் வெளியாகும் என் புத்தகத்துக்கு நான் முன்னுரை எழுதுவது எனக்கே புதிய அனுபவம். ‘தாயார் சன்னதி’ புத்தகத்துக்கான வாசகர் கடிதங்களை இன்றைக்கும் நான் பெற்று வருகிறேன். கடிதங்கள் என்றால் கலர் ஸ்கெட்ச் பேனாக்களால் எழுதப்பட்ட அஞ்சலட்டைகளோ, நீல நிற இன்லேண்ட் லெட்டரோ அல்ல. மின்னஞ்சல்கள்.

காலமாற்றத்தை ஏற்றுக் கொண்டு இணையத்தில் ‘தாயார் சன்னதி’யை வெளியிட சம்மதித்தேன். இதை வெளியிடுகிற ‘புஸ்தகா’ நிறுவனத்தின் ராஜேஷ் தேவதாஸுக்கும், ‘தாயார் சன்னதி’ புத்தகத்தை முதன் முதலில் அச்சில் வெளியிட்ட ‘சொல்வனம்’ பதிப்பகத்துக்கும் இந்த நேரத்தில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுகா
ஜூன் 25 2020
சென்னை - 93

Languageதமிழ்
Release dateJun 30, 2020
ISBN6580119105558
Thaayar Sannathi

Read more from Suka

Related to Thaayar Sannathi

Related ebooks

Reviews for Thaayar Sannathi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thaayar Sannathi - Suka

    http://www.pustaka.co.in

    தாயார் சன்னதி

    Thaayar Sannathi

    Author:

    சுகா

    Suka

    For more books

    http://www.pustaka.co.in/home/author/suka

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. திருநவேலி

    2. ஹார்மோனியம்

    3. திசை

    4. பாலாபிஷேகம்

    5. உச்சிமாளி

    6. துப்பு

    7. பொங்கப்படி

    8. சொக்கப்பனை

    9. தாயார் சன்னதி

    10. இருப்பு

    11. கோட்டி

    12. பிரமநாயகத் தாத்தாவும் விஜயலலிதாவும்

    13. நட்சத்திரம் பார்த்தல்

    14. ஆய்புவன்

    15. உ.சு.வா

    16. க்ளோ

    17. ஜெயா நீ ஜெயிச்சுட்டே

    18. கயத்தாறு

    19. இடுக்கண் களைவதாம்

    20. பன்மொழிப்புலமை

    21. விஞ்சை விலாஸின் சுவை

    22. கருப்பையா பிள்ளையின் இளைய மகன்

    23. பந்தி

    24. (அ)சைவம்

    25. வாசம்

    26. நிறம்

    27. Giant வீல்

    28. சந்திராவின் சிரிப்பு

    29. காதல் மன்னன்

    30. சில்வர் டோன்ஸ்

    31. சில மனிதர்கள், சில பாடல்கள்

    32. சுந்தரம் ஐயங்காரின் கருணை?

    33. பாம்பு என்ற பூச்சி

    34. அது அவள் அவன்

    35. கலர்

    36. கரையும் உள்ளம்

    37. வலி

    38. முருகன்சாமி பேரு

    39. சின்னப்பையன்

    40. ஒவ்வொரு ஆச்சிக்கும் ஒவ்வொரு பெயர்

    41. லோகநாயகி டீச்சரும், லலிதா ராகமும்

    42. இசைமேதையின் புகைப்படம்

    43. நாத தனுமனிஷம்

    44. யுகசந்தி

    காலகட்டத்தின் பதிவுகள்

    சொல்வனத்திலிருந்து பதிப்பகம் ஆரம்பித்து புத்தகங்கள் வெளியிடப் போகிறோம் என்று சொன்னதும், கிட்டத்தட்ட எல்லோருமே மிரட்டித்தான் அனுப்பினார்கள். 'புத்தகம் விக்கிறதெல்லாம் பெரும்பாடு. சொல்றத சொல்லீட்டேன், அப்புறம் உங்க இஷ்டம்,' என்ற ரீதியில்தான் பேச்சை முடித்தார்கள். தயங்கித் தயங்கி புத்தகங்களை விற்க ஆரம்பித்தால், புத்தகக் கண்காட்சி முடிவதற்குள்ளாகவே 'தாயார் சன்னதி தீர்ந்து போச்சு, சீக்கிரம் ப்ரிண்ட்டுக்கு சொல்லுங்க' என்று குரல் வந்தது. உடனே அடுத்த செட் பிரதிகளை அச்சிட்டு அவையும் ஒரு சில வாரங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன. இதற்கிடையே சுகா ஆனந்தவிகடனில் 'மூங்கில் மூச்சு' தொடர் எழுத ஆரம்பிக்க, ‘புத்தகம் கிடைக்கவில்லை' என்று புதிதாகப் பலரிடமிருந்து கோபமாக மின்னஞ்சல்கள் வர ஆரம்பித்தன. 'மதுரைல கெடைக்கும்னு போட்டா போதுமா? எங்கே கிடைக்கும்னு போடவேண்டாமா?' என்று ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

    அதனால் இரண்டாம் பதிப்பை மேலும் சிறப்பாக, இன்னும் சில ஓவியங்களோடு வெளியிட்டால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் 'முன்னனுபவம்' காரணமாக, ஓவியர் வள்ளிநாயகம் அவர்களிடம் கேட்டு விட்டு ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்தால் ஓவியங்கள் வரவும், அச்சுக்கு அனுப்பவும் சரியாக இருக்கும் என்று முடிவு செய்தோம். ஆனால் எதிர்பார்த்த நேரத்துக்கு முன்னதாகவே மேலும் பல அருமையான ஓவியங்களை அனுப்பி ஆச்சரியப்படுத்திவிட்டார் வள்ளிநாயகம்.

    இசக்கி என்ற பழம்பெரும் புகைப்படக்கலைஞரைக் குறித்து சுகா என்னிடம் பலமுறை ஏற்கனவே சொல்லியிருக்கிறார். ஆனால், அந்தப் புகைப்படங்கள் எங்கோ தொலைந்துவிட்டன, கிடைக்க வழியேயில்லை என்றும் வருத்தத்தோடு குறிப்பிட்டிருந்தார். ஓர் இனிய அதிர்ச்சியாக அந்தப் புகைப்படங்கள் க்ருஷி, நாறும்பூநாதன் ஆகியோரின் உதவியால் கிடைத்தன. அந்தப் புகைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது ஒரு பரவசமான அனுபவம். கருப்பு - வெள்ளையில் எடுக்கப்பட்ட அந்தக் கால திருநெல்வேலி. மாபெரும் மரத்துக்கடியில் ஓடையைக் கடக்கும் கால்நடைகள், அன்னியோன்யமாகப் பேசியபடி அமர்ந்திருக்கும் ஊர்ப் பெரியவர்கள், துளைக்கும் விழிகளோடு நின்றிருக்கும் குறப்பெண், சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும் சிறுவர்கள்... இதிலிருக்கும் சில புகைப்படங்களை வசதி, வாய்ப்புகள் இல்லாத அக்காலத்தில் எப்படி சாத்தியமாக்கினார் என்று ஆச்சரியமாக இருந்தது. இன்னொரு பக்கம் இப்படங்களிலிருக்கும் மனிதர்களின் வெகுளித்தனமும், பாழாகாத இயற்கைச் சூழலும் இனி சாத்தியமேயில்லை என்றும் தோன்றுகிறது. சுகாவின் கட்டுரைகளுக்கும், இசக்கியின் புகைப்படங்களுக்கும் எனக்குப் பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. இருவருமே, தாங்கள் நேசித்த மண்ணை, மனிதர்களைத் தங்கள் படைப்புகளில் பதிவு செய்கிறார்கள். அந்த விதத்தில் கிடைத்தற்கரிய ஒரு காலகட்டத்தின் பதிவுகள் இவை. இசக்கியின் புகைப்படங்கள் இப்புத்தகத்தில் இடம்பெறுவது மிகவும் பொருத்தமான ஒன்றாகவே இருக்கிறது.

    கட்டுரைகளைத் தொடர்ந்து அனுப்பி சொல்வனத்துக்கு பெரிய பலமாக இருப்பதோடு மட்டுமில்லாமல், இரண்டாம் பதிப்பு சிறப்பாக உருவாவதிலும் பல உதவிகளைச் செய்த சுகாவுக்கு நன்றி.

    அன்புடன்,

    சேதுபதி அருணாசலம்.

    முன்னுரை

    சிறுவயதில் வருடத்துக்கொருமுறை வரும் பொங்கல் வாழ்த்துக்காகக் காத்திருப்போம். வாழ்த்து அட்டையில் நம் பெயர் போட்டு வருகிற பொங்கல் வாழ்த்து அட்டைகள் தந்த சந்தோஷத்தை இப்போது நினைத்தாலும் உணர முடிகிறது. பின் ஓரளவு வயது வந்த பிறகு நம் பெயர் தாங்கி வந்த கடிதங்கள் கூட சிறு வயதில் பொங்கல் வாழ்த்து தந்த உற்சாகத்தைக் கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். விதவிதமான கலர் ஸ்கெட்ச் பேனாக்களால் ஓட்டப்பிடாரம் இளசை அருணா அவர்களின் அழகான கையெழுத்துடன் என் தகப்பனாருக்கு வருகிற கடிதங்களை தபால்காரர் வந்து கொடுக்கவும், அதை ஆசை ஆசையாக வாங்கிப் பார்த்த சிறுவயது நினைவுகளை இன்றைய தலைமுறையினரிடம் பகிர்ந்தால் அவர்களால் அதை ரசிக்கவோ, வியக்கவோ இயலாது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

    ஆனந்த விகடன், குமுதம் கல்கண்டு(அப்போதெல்லாம் இரண்டையும் சேர்த்துதான் சொல்வார்கள். வாங்குவார்கள்), கல்கி, இதயம் பேசுகிறது, சாவி, குங்குமம், முத்தாரம், பேசும் படம், பொம்மை போன்ற பெரியவர்களுக்கான வார, மாத பத்திரிக்கைகளுக்கிடையே சிறுவர்களுக்கான முத்து காமிக்ஸ் ஒளிந்திருக்கும். எப்போதும் சொப்பனத்தில் வருகிற ‘இரும்புக்கை மாயாவி, உற்ற தோழனாக மனதில் பதிந்த ‘சுட்டிக்குரங்கு’ கபீஷ், நினைத்தாலே அச்சம் கொள்ள வைக்கிற வேட்டைக்காரன் மாத்தையன், பெரியவனானதும் இவரைப் போல்தான் ஆக வேண்டும் என்று மனதுக்குள் சூளுரைக்க வைத்த ‘மந்திரவாதி’ மாண்ட்ரேக், அவருடனேயே வரும் பலசாலி ‘லொதார்’, வியக்க வைத்த ‘ரிப் கெர்பி’, அவரது உதவியாளர் டெஸ்மாண்ட் என பல கதாபாத்திரங்கள் ‘முத்து காமிக்ஸ்’ புத்தகங்களிலிருந்து வெளியே வருவார்கள்.

    தொலைக்காட்சி இல்லாத அந்தக் காலத்தில் இவர்களை புத்தகங்களில் மட்டுமே பார்த்து உறவாட முடிந்தது. இன்றைக்கு எல்லாவற்றையும், எல்லோரையும் தொலைக்காட்சியில், இணையதளங்களில் பார்க்க முடிகிறது. முன்பு சொன்ன பத்திரிக்கை பட்டியலில் எஞ்சி நிற்பவை சொற்பம்தான். இணையத்தில் படிப்பவர்கள் பெருகி விட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் இணையத்தில் ‘மட்டுமே’ படிப்பவர்கள் பெருகி விட்டார்கள். ஒரே வீட்டில் வசிப்பவர்கள் கூட பிறந்தநாள் வாழ்த்துகளை ‘ஃபேஸ்புக்’ மூலமாகச் சொல்லிக் கொள்கிறார்கள். அதன் சுவாரஸ்யமும், புதுமையும் அவர்களுக்குப் (அவர்களைப்) பிடித்திருக்கிறது. இணைய இதழ்கள் போக அச்சில் வருகிற செய்தித்தாள்களும், பத்திரிக்கைகளும் கூட இப்போது இணையத்துக்குள் உலவத் துவங்கிவிட்டன.

    எனது புத்தகங்களும் இணையத்தில் கிடைப்பதற்கு ‘புஸ்தகா’ நிறுவனத்தினர் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள். ஏற்கனவே எனது ‘உபசாரம்’ புத்தகத்தை இணையத்தில் வெளியிட்டிருக்கிற ‘புஸ்தகா’ நிறுவனம், இப்போது எனது முதல் புத்தகமான ‘தாயார் சன்னதி’யை இணையத்தில் வெளியிடுகிறார்கள். ‘வார்த்தை’ சிற்றிதழிலும், பின் ‘ஆனந்த விகடன்’ இதழிலும் தொடர்ந்து தொடர் எழுதியவன், நான். இவற்றுக்கிடையே நான் அதிகமாக எழுதியது, ‘சொல்வனம்’ மின்னிதழில்தான். ஆக, இணையத்தில் எழுதிய முன் அனுபவம் எனக்குள்ளது. ஆனால் இணையத்தில் வெளியாகும் என் புத்தகத்துக்கு நான் முன்னுரை எழுதுவது எனக்கே புதிய அனுபவம். ‘தாயார் சன்னதி’ புத்தகத்துக்கான வாசகர் கடிதங்களை இன்றைக்கும் நான் பெற்று வருகிறேன். கடிதங்கள் என்றால் கலர் ஸ்கெட்ச் பேனாக்களால் எழுதப்பட்ட அஞ்சலட்டைகளோ, நீல நிற இன்லேண்ட் லெட்டரோ அல்ல. மின்னஞ்சல்கள்.

    காலமாற்றத்தை ஏற்றுக் கொண்டு இணையத்தில் ‘தாயார் சன்னதி’யை வெளியிட சம்மதித்தேன். இதை வெளியிடுகிற ‘புஸ்தகா’ நிறுவனத்தின் ராஜேஷ் தேவதாஸுக்கும், ‘தாயார் சன்னதி’ புத்தகத்தை முதன் முதலில் அச்சில் வெளியிட்ட ‘சொல்வனம்’ பதிப்பகத்துக்கும் இந்த நேரத்தில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சுகா

    சுகாவுக்குப் பூசினது வண்ணதாசன்

    சுகாவுடைய இந்தப் புத்தகத்துக்கு என்ன பெயர் என்றே தெரியாது. மனுஷனுக்குப் பெயர் வைக்கலாம். நெல்லையப்பன், கோமதிநாயகம், ஆவுடையப்பன், சங்கரலிங்கம், காந்திமதி, தெய்வானை, இசக்கி, சுப்புலட்சுமி என்று ஒரு அடையாளத்துக்குப் பெயர் வைப்பது சரிதான். ஆனால் அவர்கள் வாழ்கிற இந்த வாழ்வுக்கும் ஒட்டு மொத்த அனுபவங்களுக்கும் என்ன பெயர் வைக்கமுடியும்? பேரனுபவங்களும் பெரு நிலைகளும் பெயர்களை அடையாளங்களை எல்லாம் உதறி அப்பால் செல்பவையே. அந்த அளவில், பெயர் வைக்கப்படாத அல்லது வைக்கப்பட்டு நான் அறியாத இந்தத் தொகுப்புக்குள் கடந்த சில தினங்களாக நான் குடியிருந்து வருவது ஒன்றும் தப்பில்லை. அதுதான் சரியானது கூட.

    கொஞ்ச காலமாகவே, திருநெல்வேலிக்கு ஒரு யோகம் அடிக்கிறது. கலாப்ரியா ‘நினைவின் தாழ்வாரங்கள்' என்று ஒன்று எழுதினாலும் எழுதினான், அப்படியே சுடலைமாடன் கோவில் தெருவில் ஆரம்பித்து, எங்கள் ஊரின் மூலை முடுக்கு எல்லாம் 'நடு சென்டருக்கு' வந்து விட்டன. சில கோவில்களுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிய பிறகு ஒரு முழிப்பு வந்து விடும். வௌவால் நாற்றம் எங்கே போயிற்று என்று தெரியாது. எல்லாப் பிரஹாரத்திலும் வேட்டி தடுக்குகிற சத்தமும் பட்டுச் சேலை உரசலும் ஜாஸ்தியாகிவிடும். கோவில் வாசலில் கழற்றிப் போட்டிருக்கிற செருப்பு, விதம் விதமாகப் புரண்டு கிடக்கிற அழகைச் சொல்லிமுடியாது. காணாமல் போய்விட்ட லட்சுமி டாக்கீசும், ராயல் டாக்கீசும், பார்வதி டாக்கீசும், ஆட்டத்திவசத்திற்குத் துடைத்துக் குங்குமப் பொட்டுவைத்து மாலை போட்டது மாதிரி, அதன் அதன் ஃப்ரேம் போட்ட சிரிப்புடன் நம்மைப் பார்க்கும். 'நம்மள அறியாம' நாம் நினைவுகளைக் கும்பிட்டுக் கொள்வோம். பொருட்காட்சியும் ஆனித் திருவிழாவும், சமைஞ்ச பிள்ளையைச் சடங்கு வீட்டில் எடுத்த ஃபோட்டோ மாதிரி, ஜடையில் தாழம் பூ வைத்துத் தைத்து, முன்னாலும் பின்னாலும் போட்டுக்கொண்டு வெட்கப்படும்.

    இப்படி எவ்வளவோ நடந்தது. அதற்குப் பிறகு கலாப்ரியாவே, குங்குமத்தில், 'ஓடும் நதி' எழுதினான். அவன் எழுத எழுத, இனிமேல் திருநெல்வேலியைப் பற்றி எழுதுகிறதற்கு பாக்கி ஒன்றுமே இல்லை. மிச்சம் மிஞ்சாடி இல்லாமல் வள்ளிசாக எழுதியாயிற்று. இனிமேல் நடு ஆற்றுக்குள் உறை இறக்கினால் தான் உண்டு என்றுதான் தோன்றியது.

    சுகா ‘யார் சொன்னது அப்படி?' என்கிறார்.

    ‘நாந்தான்' என்று லேசாகப் பம்மிக்கொண்டு சொன்னால்,

    ‘உங்களுக்கு என்ன கோட்டியா பிடிச்சிருக்கு? ரெண்டு நாளா மழ ஊத்து ஊத்துண்ணு ஊத்தினதுல, தைப்பூச மண்டபம் முங்கித் தண்ணி போகுதுண்ணு பேப்பர்ல போட்டிருக்கான் பாக்கலையா? மண்டபத்து உச்சியில் ஆட்டுக்குட்டி நிக்குத படம் கூட வந்திருக்கு' என்று கிழிக்கிறார்.

    'கண்ணு என்ன பொடதியிலயா இருக்கு?' என்று கேட்காதது ஒன்றுதான் குறை. கட்டன் ரைட்டா அப்படிக் கேட்கும் போது நான் மூச்சுக் காட்ட முடியாது.

    ஆமாம் தைப்பூச மண்டபம் முங்கித்தான் போகிறது. சுகாவின் பக்கங்களில் முன்னடித் துறையிலும் குறுக்குத் துறையிலும் செங்காமட்டைக் கலரில் புது வெள்ளம் சுழித்துப் போகிறது. ஒவ்வொரு மனிதனின் மனதிலும் ஒரு நதி, ஒரு வெள்ளம், ஒரு படித்துறை, ஒரு கல் மண்டபம். யார் யாரோ முங்கிக் குளிக்கிறார்கள், யார் யாரோ தலை துவட்டுகிறார்கள், எப்போதாவது யாரோ மிதந்து செல்கிறார்கள். கருப்பந் துறையில் கரைத்த சாம்பல் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஒரு செம்பருத்தி மிதந்து செப்புக் குடத் தண்ணீருக்குள் புகுந்துவிட முட்டுகிறது. தாழப் பறக்கிறது ஒரு மீன் கொத்தி. நல்லவேளை நகக்கண்களில் அழுக்கிருக்கிறது மீன் கடிக்க. செம்பகத்தக்காவை கேரியரில் வைத்து சைக்கிளில் மிதித்துக்கொண்டு போகிற அண்ணனை 'முன்ன பின்ன' பார்த்ததே இல்லை.

    சுகா யாரைப் பற்றி எழுதினாலும், தாமிரபரணி ஆற்றின் ஈரம் சொட்டுகிறது. எல்லாம் அனேகமாக நான் அறிந்த நிகழ்வுகள், நான் பார்த்த மனிதர்கள், நான் நடமாடிய தெருக்களும் இடங்களும் ஆனால் அந்த நிகழ்வுகளும் மனிதர்களும் இடங்களும் சுகாவிடம் அபாரமானதொரு உயிர்ப்பையும் அசைவையும் அடைந்து விடுகிறார்கள், விடுகின்றன.

    முகத்தின் எந்த இடத்தின் மேல் வெயில் விழவேண்டும் என்பதை விட, எந்த இடத்தில் விழக்கூடாது என்பதை அறிந்த நேர்த்தியான படங்களை அவர் எடுத்துக் கொண்டிருக்கிறார். எல்லார் முகத்திலும் அப்படியொரு சந்தோஷம். இத்தனைக்கும் அவர், 'கொஞ்சம் சிரிங்க' என்று சொல்வதே இல்லை. தானாகவே நமக்கு சிரிப்பு பொங்குகிறது. அது சிரிப்பு கூட அல்ல, சிரிப்பாணி.

    ஒரு அறுபது வயதுக்காரனாக நான் திரும்பிப் பார்க்கிறவற்றை, நாற்பது வயதுக்காரராக அவர் திரும்பிப் பார்க்கையில், இரண்டு பார்வைகளுக்கும் இடையில் அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டு பேரும் எல்லோரையும் அப்படியே ஆவி சேர்த்துக் கட்டிக் கொள்கிறோம். சுகா அப்படிக் கட்டிக் கொள்வதற்கு முன் அல்லது பின் அல்லது முன்னும் பின்னுமே ஏதாவது கிசும்பும் கிண்டலும் கேலியுமாக நிறையப் பேசுகிறார். அந்த நகைச்சுவை அவருடைய வம்சா வழிச்சொத்து. என்னுடைய பத்திரத்தின் தபசிலில் அது ஒரு இணுக்கு கூட இல்லை. அப்படி மந்திரம் மாதிரி வாய் ஓயாமல் ஏதாவது சொல்லச் சொல்ல, உருவேத்தினது போல, அந்தச் சொல்லுக்குள்ளிருந்து புடைப்புச் சிற்பங்களாக ஆட்கள் மேலெழுந்து வருகிறார்கள். ஆட்களின் எடைக்கு எடை. பேர்பாதியாக அவர்களுடைய திருனவேலி பாஷையையும் சேர்த்து நிறுத்துப் போடப்போட, அவர் எடுத்த மேற்படி புகைப்படங்கள் சச்ரூபமாக நம் முன்னால் நடமாட ஆரம்பித்து விடுகின்றன.

    இந்தப் பாவிக்கு, படிக்க வைக்கிறபோது ஆனா ஆவன்னாவில் இருந்து சொல்லித் தராமல், அக்கன்னாவில் இருந்து ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ. நிறையக் கட்டுரைகளின் கடைசி வரி அவ்வளவு வாக்காக அமைந்து, அதற்கு முந்திய அத்தனை வரிகளையும் உயரத்திற்குக் கொண்டு போய்விடுகிறது. 'எந்த சந்திரா' என்று கேட்டான் குஞ்சு என, சந்திராவின் சிரிப்பு. பன்மொழிப் புலமை முடிவது, 'அந்த நபர் காலஞ்சென்ற யாகவா முனிவர். மொழி இனான்ய மொழி' என்று. 'ஒரு மயிராண்டி கோயிலையும் நான் பார்க்கலை' என்று கடைசி வரியில் சுந்தரம் பிள்ளை பெரியப்பா சொல்லும்போது, ஜயண்ட் வீல் உயரம், நெல்லையப்பர் கோவில் கோபுரத்தை விட கொஞ்சம் ஜாஸ்தி என்று புரியும். ஹார்மோனியம் பற்றிய பதிவின் கடைசி வரியில் உண்டாகும் துக்கம் பாறாங்கல் போன்றது. இந்தத் துக்கத்திற்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல, 'என்ன சார் சாப்பிடுறீங்க' என்று கருப்பையா பிள்ளையின் மகன் கேட்கிறதுடன் முடியும் விஞ்சை விலாசின் சுவை.

    சாணை பிடித்தது மாதிரி இப்படிக் கடைசிவரியை எழுதத் தெரிந்தவருக்கு, அதற்கு முந்திய வரிகளை எழுதத் தெரியாமலா போகும்? அவருடைய பதினேழு பதினெட்டு வருட சினிமா அனுபவங்கள், அதுவும் வாத்தியார் என்று மட்டுமே அவர் அழைக்கிற பாலுமகேந்திரா என்கிற உயர் கலைஞனிடம் கற்றுக் கொண்ட வித்தையே, முடிவை நோக்கி நகர்வதற்கும் நகர்த்துவதற்குமான, கச்சிதமான அளவில் கத்தரிக்கப்பட்ட வரிகளை மட்டும் முன்வைக்கிற இந்த நுணுக்கத்தை அவருக்கு அளித்திருக்க வேண்டும்

    சுகா ஒரு போர்ட்ரெய்ட் ஓவியர் போல அவரை ஈர்க்கிற கச்சிதமான முகங்களைத் தேர்ந்தெடுத்து வரைந்து நம் பார்வைக்கு வைக்கிறார். அப்படி வரைந்து வைக்கப்பட்ட முகங்கள் நமக்கும் மிக நெருக்கமான முகங்கள் ஆகிவிடுகின்றன. குஞ்சரமணி 'என்ற' குஞ்சுவை விடுங்கள். சுகாவுக்கும் விட நமக்கு குஞ்சு நெருக்கமாகி விட்டான், 'ஏ. நம்ம சேக்காளில்லா டே, புள்ளிக்காரன்' என்று அவனைச் சொல்லத் தோன்றுகிறது. அவனைத் தவிர, என்று அடுத்த பாராவை ஆரம்பிக்கும் முன்னால், எனக்கு லேசாக ஒரு டௌட் வருகிறது. இந்த 'குஞ்சு' என்ற பெயரில் அப்படி யாருமே இருந்திருக்க மாட்டார்களோ? ஒரு வாசிப்பு சுவாரசியத்திற்காக, ஒரே ஜாடையில் இருக்கிற அண்ணன் தம்பிகளை, 'ஒண்ணாப் பண்ணி ரெண்டா புட்ட மாதிரி இருக்கே' என்று சொல்கிற மாதிரி சுகா தன்னையே அப்படிப்பிட்டு, இன்னொருத்தராக நடமாட விட்டிருப்பாரோ என்று தோன்றுகிறது. அப்படிச் செய்தாலும் தப்பில்லை. அதற்கு என்ன முனிசிபாலிட்டியில் போய் லைசன்சா வாங்க வேண்டும், கிடையாதே. தாராளமாக அப்படிச் செய்ய அவருக்கு ரைட் உண்டு. மேலும், அவர் ஒரு இடத்தில் கூட, 'சொல்லுவதெல்லாம் உண்மை' என்று எந்தக் கோர்ட்டிலும் அடித்துச் சத்தியம் பண்ணவும் இல்லை. சுவாரசியம் என்று ஒன்று உண்டு இல்லையா, அதுபோல இது 'சுகாரசியம்.' அவ்வளவுதான்.

    சரி. குஞ்சு எப்படியும் இருக்கட்டும். அந்தக் குட்டை ஆச்சியும், மாம்பழத்தாச்சியும் பசு ஆச்சியும் எப்படிப் பொய்யாக இருக்க முடியும். பிரமநாயகத்தாத்தா புருடா என்று யாராவது ருசு பண்ணினால், பாவம் அந்த விஜயலலிதாவுக்கே வருத்தமாகப் போகும். காந்தி நகரைக் காலிபண்ணி விட்டுப் போனாலும் போய்விடலாம். ஜே.கே ரசிகரான ஏ.வி.எம் காலனி கோபாலன் மேல் சந்தேகமா என்ன, ஓங்கூர்ச் சாமியார் சிரிக்க ஆரம்பித்து விடுவார். அலங்காரத்தம்மாள் என்ன செய்வார் என்று உடனே தீர்மானிக்க முடியாது. பெயர் வேண்டுமானால் முன்னேபின்னே இருக்கலாமே தவிர, மந்திரமூர்த்தி மாமா போன்ற காதல் மன்னன்களை நாம் பார்க்காதவர்களா? சாமி கொண்டாடி அருணாசலம் பிள்ளை வாசல் திண்டில் உட்கார்ந்திருக்கிறார். பக்கத்தில் போய்ப் பாருங்கள். இப்பவும் உச்சினிமாகாளி கொடை சமயம் அவர் கையில் வைத்திருக்கும் கப்பரைத் திருநீறு வாசம் அடிக்கிறதா இல்லையா?

    அரணாக்கயிறு கோமணத்துணியை நம்பாத மாதிரி, இது போல வெட்டிக் கேள்விகள் எல்லாம் வரும் என்பதால்தான், அவ்வப்போது ஒரு நம்பகத்தன்மைக்காக, நாஞ்சில் நாடன், பி.ஏ.கிருஷ்ணன், ஜெயமோகன், பாரதி மணி, வ.ஸ்ரீ, சீமான் எல்லாம் கௌரவ நடிகர்கள் மாதிரி வந்து போகிறார்கள். அதிலும், 'கை வீசம்மா கை வீசு சீன் ஒண்ணுக்கே துட்டு செத்துது' என்பதற்கு ஈடாக, பாரதி மணி அசத்தி விடுகிறார். 'பாட்டையா கொண்ணுட்டேருவே' என்று தரை டிக்கட்டில் இருந்து விசில் சத்தம் பறக்கிறது.

    இதையெல்லாம் விட முக்கியமானது ஒன்று. தாமிரவருணி போல அவருக்குள் சங்கீதம் ஒரு ஆறாக ஓடுகிறது. இரண்டும் ஒன்றாகக் கூட இருக்கலாம் அவருக்கு. தீராநதி தான் தீரா இசை. எங்கே எல்லாம் இசை சம்பந்தமாக வருகிறதோ, அங்கே எல்லாம் அவர் வேறு ஆள் ஆகிவிடுகிறார். அதுவரைக்கும் நாம் கையைத் தோள் மேல் போட்டுப் பேசிக்கொண்டு இருந்தவர் இவர்தானா என்று தோன்றிவிடுகிறது. நாஞ்சில் நாடனாவது பக்கத்தில் நிற்கலாம். நான் ஒரு எட்டு அடியாவது தள்ளி நிற்கிறதுதான் மரியாதை. தவ்வித் தவ்வி உச்சாணிக்கு அப்படி அவர் போகிறதை என்னை மாதிரிக் கூட்டாளி, ஏறிட்டுப் பார்த்துக்கொண்டு நிற்க வேண்டியதுதானே தவிர, வேறு எதுவும் செய்வதற்கில்லை. லோகநாயகி டீச்சர், ஜி.ஆர் எனும் ஜி.ராமனாத அய்யர், ஆர்கன் வாசிக்கும் கோயில் பிள்ளை, கிருஷ்ணன் சார் வைத்திருக்கிற 'பொட்டி', டேப் சாய்பு, வி.கே.புதூர் வினாயகத்துப் பெரியப்பா (நாத தனுமனுஷம் உச்ச உயிர்ப்புடைய ஒரு சித்திரம்), பேங்க் பெரியப்பா, இளையராஜா, இப்படி யார் ஞாபகமாவது வந்து விட்டால், அந்த நினைவின் புள்ளியில் சுகா அப்படியே காணாமல் போய், அவருடைய இடத்தில் ‘விளக்குப் பொருத்தி வச்ச மாதிரி' அசையாமல் ஒரு தீப மங்கள ஜோதி எரிய ஆரம்பித்து விடுகிறது.

    படித்து முடித்து விட்டோம். கொஞ்சம் கட்டையைச் சாய்ப்போம் என்று படுத்தால், ஒவ்வொரு ஆச்சிக்கும் ஒவ்வொரு பெயர், விஞ்சை விலாசின் சுவை, கருப்பையா பிள்ளையின் இளைய மகன், முருகன் சாமி பேரு, இசைமேதையின் புகைப்படம், ஹார்மோனியம் என்று அடுக்கடுக்காகவும் சீட்டுக் கட்டுக் கலைத்துப் போட்ட மாதிரியும் ஒவ்வொன்றாக ஞாபகம் வருகிறது. 'இவனுக்குண்ணு எப்படி இத்தனை பேரு கண்ணுல தட்டுப்படுதாங்களோ?' என்று ஆச்சரியம். அந்த ஆச்சரியம் கொஞ்ச நேரம்தான். சம்பந்தமே இல்லாமல் தொண்டையை அடைக்கும். மூசு மூசென்று அழலாம் என்று தோன்றும். 'என்ன மூதி, அழுதுக்கிட்டு இருக்கே?' என யாரும் கேட்டு விடுவதற்குள் கண்ணைத் துடைத்துக் கொள்வோம். துடைத்துக் கொள்வதால் மட்டும் எந்த அழுகை நின்றிருக்கிறது? 'என்னடே?' என்று யாராவது தோளை உலுக்குவார்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1