Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Koorvaalin Nizhalil
Oru Koorvaalin Nizhalil
Oru Koorvaalin Nizhalil
Ebook463 pages6 hours

Oru Koorvaalin Nizhalil

Rating: 0 out of 5 stars

()

Read preview
Languageதமிழ்
Release dateJan 8, 2017
ISBN9789384641948
Oru Koorvaalin Nizhalil

Related to Oru Koorvaalin Nizhalil

Related ebooks

Reviews for Oru Koorvaalin Nizhalil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Koorvaalin Nizhalil - Thamizhini

    ...

    பொருளடக்கம்

    முன்னுரை

    என்னுரை

    பாதை திறந்தது

    போருக்குள் பிறந்தேன்

    ஆயுதப் பயிற்சி பெற்ற அரசியல் போராளி

    தமிழ் மக்களும் ஆயுதப் போராட்டமும்

    ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்

    கிழக்கு மண்ணின் நினைவுகள்

    உண்மையற்ற சமாதானமும் உருக்குலைந்த மக்கள் வாழ்வும்

    நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடுகிறோம்

    சரணடைவும் சிறைச்சாலையும்

    புனர்வாழ்வு

    அடிக்குறிப்புகள்

    இலங்கை வரைபடம் (மாவட்ட ரீதியாக), நன்றி : ரகுநாதன் உமாபதி ,மேலும் தகவல்களுக்கு - இலங்கை நில அளவைத் திணைக்கள இணையத்தை காண்க (www.survey.gov.lk)

    வட இலங்கை : இறுதிப்போர் நடந்த இடங்கள்

    முன்னுரை

    தமிழினியின் எழுத்துச் சாட்சியமான இந்த நூல் ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான ஆவணப்பதிவாக அமையும். நானும் தமிழினியும் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட பின்னர், தனது போராட்ட அனுபவங்களையும் சிறை அனுபவங்களையும் பல தருணங்களில் பகிர்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. தமிழினியின் விசாரணை அதிகாரிகள் தொடக்கம் சிறைச்சாலை - புனர்வாழ்வு முகாம் என்பவற்றில் தமிழினி எதிர்கொண்ட ஊடக வியலாளர்கள், சமூக ஆய்வாளர்கள்வரை அனைவரும் பதில் தேடிய ஒரு முக்கியமான கேள்வியாக 'ஏன் தோற்றீர்கள்?' என்ற கேள்வி அமைந்திருந்தது. விசாரணைக் காலங்களில் இக்கேள்விக்குப் பல்வேறு பதில்களை அவர் கூறியிருந்தபோதிலும் போராட்டத்தில் இணைந்திருந்த மக்களுக்கும் அவர்தம் எதிர்காலச் சந்ததியினருக்கும் போராட்டத்தின் உண்மை நிலையை ஒளிவுமறைவின்றியும் பாரபட்சமின்றியும் தெளிவுபடுத்த வேண்டுமென அவர் உறுதியாக நம்பினார். போராட்டத்தின் சகல படிநிலைகளிலும் நிலவிய உண்மைகள் வெளிக்கொணரப்பட்டால் மட்டுமே தமிழ் மக்கள் தமது நலன்களையும் தமது எதிர்காலச் சந்ததியின் நலன்களையும் கவனத்தில் கொண்டு தமது அரசியல் பாதையை வகுத்துக்கொள்ள முடியும் என அவர் கருதினார்.

    இவ்வாறான செயற்பாட்டிற்கு உதவ வேண்டிய மாபெரும் கடமையும் பொறுப்பும் தனக்கிருப்பதாக அவர் உறுதியாக நம்பினார். ஆயிரக்கணக்கான போராளிகளின் தீரம் மிகுந்த உயிர் அர்ப்பணிப்புகளின் மூலமும், இலட்சோபலட்சம் மக்களது பேராதரவுடனும் கட்டியெழுப்பப்பட்ட ஒரு போராட்ட இயக்கம் ஏன் தோற்கடிக்கப்பட்டது என்பதற்கான உண்மையான காரணங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதில் தமிழினி மிகவும் உறுதியுடன் இருந்தார். 'தண்ணீர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்' என்ற வரிகள் அவரது மனநிலையை மிகச் சரியாக வெளிப்படுத்தின.

    தமிழினி நோயால் மோசமாகப் பாதிக்கப்படுவதற்கு முன்னராகவே தனது எழுத்தைப் பூரணமாக்கி நூலாக வெளியிட வேண்டும் என்ற துடிப்புடன் நீண்ட இரவுகள் கண்விழித்து இதன் அத்தியாயங்களை எழுதினார். நோயின் கொடுமைக்கு அவர் உள்ளாகாமல் இருந்திருந்தால் இந்நூல் மேலும் பல உண்மைகளை உள்ளடக்கி, இன்னும் விரிவானதாக அமைந்திருக்கும். இந்நூலை எழுதிய காலங்களில் அவர் என்னுடன் பல விடயங்களைக் கலந்தாலோசித்தபோதிலும் எதை வெளிப்படுத்துவது எதைத் தவிர்ப்பது என்ற அவரது முடிவுகளில் நான் எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்த முயலவில்லை. உண்மையைச் சொல்வதற்காக அவர் எத்தகைய கடுமையான விமர்சனங்களின் மூலம் சமூகஒதுக்கம் செய்யப்பட்டாலும்கூட அத்தண்டனையை எதிர்கொண்டு, அத் தண்டனையைப் பகிர்ந்துகொள்ள மனதளவில் நானும் தயாராகவே இருக்கின்றேன் என்ற உத்தரவாதத்தை அவருக்கு வழங்கினேன். போராட்ட அனுபவங்களைத் தனது அறிவுவளர்ச்சியினூடாக உரைத்துப் பார்த்து வெளிப்படுத்துவதற்கான பூரண சுதந்திரம் தமிழினிக்கு இருந்தது.

    எந்த மக்களுக்காக நாம் போராடுகிறோமோ அந்த மக்களும் அவர்தம் நலன்களுமே போராட்டத்தின் முதன்மையான அம்சங்கள் என்ற நிலைப்பாடு தமிழினியின் சிந்தனையில் அடிநாதமாய் எப்போதும் இருந்தது என்பதை அவருடன் வாழ்ந்த இரண்டு வருடங்களில் என்னால் உணரக்கூடியதாக இருந்தது. ஆயுதப் போராட்ட அமைப்பொன்றின் உறுப்பினராக அவர் இருந்தபோதிலும் போராட்டத்திற்குள் சிக்குண்ட மக்களின் நலன்களையே அவர் முன்னிறுத்திச் செயற்பட்டார் என்பதையும், அவரது இறுதி நாட்களில்கூடப் பின்வரும் விசயங்களில் தனது மனசாட்சிக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் தான் துரோகமிழைக்கவில்லை என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார் என்பதை நானறிவேன்.

    தனது விசாரணையின்போதோ அல்லது அதன் பின்னரோ சக போராளி ஒருவர்கூடத் தன்னால் எதிரியிடம் காட்டிக்கொடுக்கப்பட வில்லை; தான் சார்ந்திருந்த அமைப்புக்கு உரியதான ஒரு சதம் பணத்தையோ, சிறு பொருளையோ தான் எதிரியிடம் ஒப்படைக்கவோ அல்லது சொந்தப் பாவனைக்கு எடுத்துக்கொள்ளவோ இல்லை.

    வரலாறு தமிழினிக்குத் தீர்ப்பெழுதட்டும்.

    (இந்நூலின் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தில் புற்றுநோய் எதிர்ப்புப் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தமிழினி விரும்பியிருந்தார். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்பதை வாசக அன்பர்களுக்கு அறியத் தருகிறேன்.)

    பரந்தன் ம. ஜெயக்குமரன்

    05 நவம்பர் 2015

    என்னுரை

    எனது போராட்டப் பயணத்தின் நினைவுகளையும் அது எனக்குப் பெற்றுத் தந்த அனுபவங்களையும் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறேன். இது முழுமை யான வரலாறு எனக் கூற முடியாது. எனக்கு நினைவு தெளிந்த காலத்திலிருந்து கரைபுரண்டோடிய காட்டு வெள்ளமாகப் போருக்கூடாக அடித்துச் செல்லப்பட்ட வாழ்வின் கணங்களை அச்சொட்டாகப் பதிவு செய்தல் அப்படி இலகுவான காரியமாக எனக்குத் தென்படவில்லை. இருப்பினும் நினைவழியாத் தடங்களாக நெஞ்சுக்குள் கனன்றுகொண்டிருந்த நெருப்பைக் கொஞ்சமாக வெளியேற்றியுள்ளேன். அவ்வளவுதான்.

    எதற்காக இதனை எழுத வேண்டும் என என்னிடமே பல தடவை கேட்டுக்கொண்டேன். ஒரே பதில்தான் என்னை உந்தியது. நான் உயிராக நேசிக்கும் மக்களிடம் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும். ஓர் இனத்தின் அரசியல் அபிலாசைகளை மீட்டெடுப்பதற்காகக் கருக்கொண்ட போராட்டம், இலட்சோபலட்சம் உயிர்களின் மீது கட்டியெழுப்பப் பட்டது. இறுதியில் அதன் போக்கிடம் ஏன் இப்படிப் பூச்சியமானது? உலகமே அதிர்ந்துபோன கேள்வி இது.

    போராட்டத்தை முழுவதுமாகத் தன்னகப்படுத்திக் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நானும் ஓர் உறுப்பினராக இருந்துள்ளேன். போராட்டத்தின் இறுதி இருபது வருடங்கள் நானும் ஒரு சாட்சியாகப் போருக்குள் வாழ்ந்திருக்கிறேன். நாங்கள் எமது மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டோம். ஆயுதங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அரசியல் இலட்சியத்தைத் தோற்கடித்துவிட்டோம். இன்று எமது மக்களின் வாழ்வு இருநூறு வருடங்கள் பின்னோக்கிப் போயிருக்கிறது. எதையுமே நம்பாதவர்களாக, எல்லாவற்றுக்கும் பயப்படுகிறவர்களாக, தமக்குள்ளேயே சிறுத்துப்போகிறவர்களாக, யதார்த்த உலகத்தை வெற்றிகொள்ள முடியாதவர்களாகப் பின்னடித்துப் போகிறார்கள். முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக நீண்ட யுத்தத்தின் வடுக்களை இன்னமும் எமது சந்ததி தமது மனங்களில் சுமக்கிறது.

    எந்த ஓர் உயிரினமும் போராடினால்தான் வாழ்க்கை. இது இயற்கையின் நியதி. அந்தவகையில் எமது மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காகப் போராட வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் இனியும் ஆயுதப் போராட்டம் என்ற வழிமுறையில் எமது அடுத்த சந்ததி சிந்திக்கக் கூடாது என்பதை எனது ஆத்மாவிலிருந்து கூறுகிறேன். இந்த நாட்டில் இனியும் இரத்த ஆறு பாயக் கூடாது. எந்த அன்னையர்களும் தனது பிள்ளையைப் பெற்றெடுத்த வயிற்றிலும், பிள்ளையைச் சுமக்கும் பிரேதப் பெட்டியிலும் அடித்துக்கொண்டு அழக் கூடாது. எமது எதிர்காலச் சந்ததி தமது அறிவாற்றலால் உலகத்தை வென்றெடுக்க வேண்டும். மனங்கள் ஒன்றுபட்ட நவீன உலகத்தின் தரிசனங்களை அவர்கள் நேரடியாக அனுபவிக்க வேண்டும். போர்க்களங்களில் உயிரைக் கொடுத்த வீரர்கள் ஒவ்வொருவரும் இந்த யுத்தம் எங்களோடு முடிந்துபோக வேண்டும் என்றுதான் எண்ணினார்களே தவிர அடுத்த சந்ததிக்கும் அது தொடர வேண்டும் என அவர்கள் நினைத்திருக்கவில்லை.

    கடந்த காலத்தின் பாடங்கள் எமது சந்ததியை ஆரோக்கியமான, வெற்றிகரமான பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும். இந்த நாட்டின் மக்களுக்கும் எதிர்காலச் சந்ததிக்கும் நான் சொல்ல நினைக்கின்ற செய்திகளை எந்தளவுக்குச் சரியாகச் சொல்லியிருக்கிறேன் எனத் தெரியவில்லை. ஆனால் அதற்காகப் பெரிதும் முயன்றிருக்கிறேன். எனது மாணவப் பருவத்தில் நான் சார்ந்த சமூகத்திற்கு ஏதாவது நன்மையான காரியத்தை ஆற்ற வேண்டும் என்ற பெருவிருப்போடுதான் போராளியாக மாறினேன். எனது வாழ்வு இறுதிவரை போராளியாகவே இருக்கும். ஆயுதம் ஏந்துவதன் மூலம், பழிவாங்குதலின் மூலம் எனது சமூகத்திற்கும் நாட்டிற்கும் உலகத்திற்கும் எந்த நன்மைகளையும் செய்துவிட முடியாது என்பதை அனுபவப் பாடங்கள் கற்றுத்தந்தன. அமைதியும் சமாதானமுமே எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் இயல்பான சாத்தியத்தை உருவாக்கும். அந்த வகையில் எனது இறுதிக் காலம்வரை எனது சமூகத்திலும் நாட்டிலும் மட்டுமல்ல உலகத்தின் அமைதிக்காகவும் சமாதானத்திற்காகவும் எனது போராட்டம் தொடரும்.

    போருக்கான பாதையைவிடக் கடினமானது உண்மையான சமாதானத்தின் வழி என்பதையும் நானறிவேன். எத்தனை தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும் என்பதற்கான முன்முயற்சியை இந்தப் புத்தகம் உணர்த்தும். மானுட நேயமும் உண்மையான சமூகப் பற்றும் கொண்ட ஆயிரமாயிரம் சமாதானப் போராளிகள் என்னுடன் கைகோத்து நிற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் என் கைகளை உயர்த்துகிறேன்.

    தமிழினி

    பாதை திறந்தது

    இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப்பரப்புக் காடுகளின் செழுமை மீண்டும் துளிர்க்க ஆரம்பித்திருந்தது. பெருமரங்களைத் தழுவிப் படர்ந்திருந்த கொடிகளில் பூத்துக் குலுங்கிய வண்ண மலர்களின் வாசனை காற்றிலே கலந்து எங்கும் பரவியிருந்தது. உளுவிந்தம் மரக் கொப்புகளில் தொங்குமான்கள் அச்சமின்றி

    ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன. உடும்புக் குட்டிகள் தமது வளைகளை விட்டு வெளியேறி உலவப் போய்க்கொண்டிருந்தன, புற்படுக்கைகளில் தெறித்துக் கிடக்கும் பனித்துளிகளில் தாகம் தீர்த்துக்கொண்டிருந்தன காட்டு முயல்கள்; காலை இளவெயிலில் தமது தோகையை விரித்துச் சிலுப்பிச் சிலுப்பிக் காயவைத்துக்கொண்டிருந்த கான மயில்களும் இரை தேடிப் புறப்பட்டிருந்த கானாங் கோழிகளும் புளுனிக் குருவிகளுமாக; ஓய்வின்றி வெடிக்கும் குண்டுகளின் பாரிய அதிர்வுகளும் தீச்சுவாலைகளும் கந்தக மணமும் அற்றுப்போய் ஓய்ந்திருந்த போரினால் கிடைத்த பேரமைதியின் சூழலில் உல்லாசமாகத் திளைத்துக் கிடந்தது வன்னிக்காடு.

    2002ஆம் ஆண்டு இலங்கை அரசும் விடுதலைப் புலிகள் இயக்கமும் யுத்த நிறுத்தம் என்ற இணக்கத்திற்கு வந்திருந்ததன் முதற்கட்டமாக ஏ9¹ நெடுஞ்சாலையை மக்கள் பாவனைக்குத் திறந்துவிடுவது என்ற உடன்பாட்டுக்கு வந்திருந்தனர். இலங்கையின் மத்திய மலைநாட்டிலுள்ள கண்டி நகரத்தையும் வடக்கு முனையாகிய யாழ்ப்பாண நகரத்தையும் இணைக்கின்ற இந்த வீதியானது முன்னூற்று இருபத்தைந்து கிலோ மீற்றர் நீளமானது. ஆசியாவின் பிரதான வீதிகளில் ஒன்றாகத் தர நிர்ணயம் செய்யப்பட்டிருந்த இவ்வீதி இலங்கையின் பல நகரங்களை ஊடறுத்துச் செல்கின்றது. இலங்கை அரச படைகளுக்கு எதிராகத் தமிழ் விடுதலை இயக்கங்கள் ஆயுதமேந்திப் போராடத் தொடங்கிய காலகட்டத்தில் 1984 தொடக்கம் 2006 வரை பல தடவைகள் இந்த வீதி மக்கள் போக்குவரத்து செய்ய முடியாதவாறு மூடப்பட்டு வந்திருந்தது.

    தமிழினி

    2002 பெப்ரவரி பதினைந்தாம் திகதி திறக்கப்படவிருந்த இந்த வீதியின் இருபது சதவீதமான பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், ஏ9 நெடுஞ்சாலை திறப்பு நிகழ்வானது சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை மகளிர் சார்பாக நானும் சில பெண் போராளிகளுடன் ஓமந்தைப் பிரதேசத்திற்குச் சென்றிருந்தேன். அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சுதா²(தங்கன்) புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன்³ ஆகியோருடன் வேறு பல போராளிகளும் நிகழ்வில் பங்கு பெற்றிருந்தனர். இலங்கை இராணுவத்தினரின் காவலரண்களும் விடுதலைப் புலிகளின் காவலரண்களும் எதிரும் புதிருமாக அமைந்திருந்தன. அவற்றின் குறுக்காக ஏ9 வீதி மண் அரண்களாலும் மறைப்புகளாலும் மூடப்பட்டிருந்தது. சர்வதேச போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு, சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்த வீதி பொதுமக்களது பாவனைக்காகத் திறந்துவிடப்பட்டது.

    ஆயிரக்கணக்கான உயிர்களின் குருதியில் நனைந்திருந்த அவ்வீதியின் மறுகரையில் இராணுவத்தினரும் எம்மைப் போலவே கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். அவர்களும் நாங்களும் பரஸ்பரம் கைகளை அசைத்துப் புன்னகைத்தபடி சமாதானத்தைத் தெரிவித்துக்கொண்டாலும் எமது மறு கரங்கள் ஆயுதங்களை இறுகப் பற்றியபடியே இருந்தன. அச்சந்தர்ப்பத்தில் தொடர்ச்சியாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்ற போர் வெற்றிகளின் காரணமாகவே இலங்கை அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்திருக்கிறது என்கிற வெற்றி மயக்கமும், அவை எமக்குச் சர்வதேச அங்கீகாரத்தை ஈட்டித் தந்துவிட்டன என்ற கருத்து நிலையும் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உட்பட எங்கள் அனைவரையும் ஆட்கொண்டிருந்தது.

    ஊடகவியலாளர்கள் பெரும் கூட்டமாக ஏ9 வீதியில் திரண்டு வந்திருந்தனர். யுத்தம் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் வன்னிப் போர் வலயத்திற்குள் ஊடகத்தினர் நுழைவதற்கான அனுமதி புலிகளாலும் இராணுவத்தினராலும் முற்றாக மறுக்கப் பட்டிருந்தது. அங்கு வந்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்களைக் கண்டபோது உலகத்தின் கண்கள் எம்மை நோக்கித் திரும்பியிருப்பது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. பளிச் பளிச் என மின்னலடிக்கும் புகைப்படக் கருவிகளும் வீடியோ கருவிகளும் நீண்டிருந்த ஒலிவாங்கிகளும் ஒலிப்பதிவுக் கருவிகளுமாக, ஊடகப்படையொன்றினால், வரிச்சீருடை தரித்து ஆயுதங்களுடன் நின்றிருந்த புலிகளாகிய நாங்கள் முற்றுகையிடப்பட்டிருந்தோம்.

    அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்கள் தமது கேள்விகளால் எம்மைத் துளைத்தெடுக்கத் தொடங்கினர். ஆனாலும் எல்லாக் கேள்விகளுமே ஒரே அடிப்படையைக் கொண்டதாகவே இருந்தது. தாங்கள் ஏற்கனவே தீர்மானித்திருந்த பதில்களைப் போராளிகளின் வாய் மொழியூடாகப் பெற்றுக்கொள்வதற்காகவே அவர்கள் பெரிதும் முயற்சி செய்வது போலிருந்தது.

    ஆயதமேந்திப் போராடிய நீங்கள் ஏன் சமாதான வழிமுறைக்கு வந்திருக்கிறீர்கள்? தமிழீழத்தைக் கைவிட்டுவிட்டீர்களா? உங்களுடைய சக போராளிகள் ஆயிரக்கணக்காக மரணித்துப் போயிருக்கிற நிலையில் உங்களது தலைவர் தமிழீழத்தைக் கைவிட்டால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? மீண்டும் யுத்தம் வருமா? உங்களுக்குச் சமாதானத்தில் நம்பிக்கை இருக்கிறதா? நீங்கள் மீண்டும் யுத்தத்தில் ஈடுபடுவீர்களா? வீட்டுக்குப் போக விருப்பமில்லையா? காதலிப்பீர்களா? கலியாணம் செய்வீர்களா? இயக்கம் இவற்றுக்கான அனுமதியைத் தருமா? ஏன் கூந்தலை இப்படி வளைத்துக் கட்டியிருக்கிறீர்கள்? ஏன் இடுப்புப் பட்டி கட்டியிருக்கிறீர்கள்? உங்களுக்கும் சமூகப் பெண்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? மீண்டும் சமூகம் உங்களை ஏற்றுக்கொள்ளும் என நினைக்கிறீர்களா? இப்படி நூற்றுக்கணக்கான கேள்விகள் அங்கிருந்த போராளிகளை நோக்கி வீசப்பட்டன.

    இயக்கத்தின் தலைமைச் செயலகத்தால் விடுக்கப்படும் உத்தியோகப்பூர்வ அறிக்கைகள், செய்திகள் என்பவற்றுக்கு அப்பால் சாதாரண போராளிகளினதும், இடைநிலைப் பொறுப்பாளர்களினதும் சராசரி மனநிலையைத் துருவிப் பார்ப்பதே ஊடகங்களின் தந்திரமாக இருந்தது. இயக்கத்தில் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் அனுமதி குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இருந்தது. ஆகையால் இப்படியான சந்தர்ப்பங்கள் அமையும்போது பல போராளிகள் புன்னகையுடன் அந்த இடத்தைவிட்டு நழுவிப் போய்விடுவார்கள். ஏ9 பாதை திறப்பு நிகழ்வில் கலந்துகொண்ட ஊடகங்களின் கேள்விகளுக்கு நானும் மற்றும் தங்கன், புலித்தேவன் ஆகியோரும் பதிலளிக்க அனுமதிக்கப்பட்டிருந்தோம். நீண்ட காலத்திற்குப் பின்பு மக்களுக்குக் கிடைத்திருந்த அமைதியும், பாதை திறப்பு மற்றும் பொருளாதாரத் தடைநீக்கம் என்பனவும் பொது மக்களுடைய முகத்தில் புதிய ஒளியைத் தோற்றுவித்திருந்தன. ஆனாலும் இந்தச் சமாதான சூழ்நிலையை நீடிக்கச் செய்து ஒரு நிரந்தரமான தீர்வை நோக்கிப் புலிகள் முன்னேறிச் செல்வார்கள் என்ற நம்பிக்கையை மக்களது வார்த்தைகளில் காண முடியவில்லை. மாறாக எப்போது இந்தச் சமாதானம் முறிவடையுமோ என்கிற குழப்பமான மனநிலையுடன் கிடைக்கிற காலத்திற்குள் தமது வாழ்க்கையைச் சிறிதளவேனும் கட்டியெழுப்பிக்கொள்ள வேண்டும் என்ற பதற்றத்துடன் செயல்படத் தொடங்கியிருந்தனர். தமிழர் பிரதேசங்களுக்கூடாகச் செல்லும் ஏ9 நெடுஞ்சாலையைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் இராணுவ, அரசியல் ரீதியான நலன்களை முன்னிறுத்தி இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் தமது செயற்திட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதன் காரணமாக அந்த வீதியை அண்மித்து நடைபெற்றிருந்த கொடூர யுத்தங்களினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பல ஆயிரங்களையும் கடந்திருந்தன. 1995 தொடக்கம் 2002 வரையான காலப் பகுதியில் நான் நேரடியாகத் தொடர்புபட்டிருந்த சம்பவங்களின் அடிப்படையில் இந்த வரலாற்றை விரித்துச் செல்வது பயனுள்ளது என நினைக்கிறேன்.

    1995 டிசம்பர் மாதம் யாழ்ப்பாண மாவட்டத்தை இலங்கை இராணுவத்தினர் முழுமையாகக் கைப்பற்றியதன் பின்னர். விடுதலைப் புலிகள் இயக்கம் வன்னிப் பெருநிலப்பரப்⁴பைத் தமது பிரதான தளமாகக் கொண்டு செயற்படத் தொடங்கியிருந்தது. அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தின் இழப்பு⁵, புலிகளுக்கு ஈடுசெய்துகொள்ள முடியாததாகவே இருந்தது. இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஆளணி மற்றும் பொருளாதாரத்தை உவந்தளிக்கும் வளப் பிரதேசமாக யாழ்ப்பாணம் இருந்ததுடன், 1990 தொடக்கம் புலிகளின் நிர்வாகத் தலைநகரமாகவும் யாழ்ப்பாணமே விளங்கியது. அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன்⁶, நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி⁷ ஆகியோர் யாழ்ப்பாணம் இழக்கப்பட்டதன் தாக்கம் பற்றிப் போராளிகள் மத்தியில் உணர்வுரீதியாகப் பல தடவைகள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். மீண்டும் யாழ்ப்பாணத்தை விரைவாகக் கைப்பற்ற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் புலிகள் செயற்படத் தொடங்கினார்கள்.

    யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதேசங்களை நன்கு அறிந்திருந்த ஆண் பெண் போராளிகள் தெரிவு செய்யப்பட்டு யாழ் செல்லும் படையணி உருவாக்கப்பட்டிருந்தது. லெப். கேணல் மகேந்தி⁸, லெப். கேணல் தணிகைச்செல்வி⁹ ஆகியோர் அந்த அணிகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தனர். பூநகரியைப் பின்தளமாகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினருக்கான 'தொல்லை கொடுக்கும்' தாக்குதல் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் போரில் தென்மராட்சிப் பகுதியில் தன்னுடனிருந்த சிறிய அணியுடன் சிறப்பாகச் செயற்பட்டு, தலைவரின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். இதன் பின்னர் 1993இல் அரசியல் பொறுப்பாளராக நியமிக்கப்படும்வரை யாழ்ப்பாண மாவட்டத்தின் இராணுவத் தளபதியாக தினேஷ் என்ற பெயருடன் செயற்பட்டிருந்தார்.

    இயக்கத்தின் நிதிப் பொறுப்பாளரான தமிழேந்தி யாழ்ப்பாணம் இழக்கப்பட்டதன் காரணமாக உணர்வு ரீதியாக மிகவும் பாதிப்படைந்திருந்தார். போராளிகள் மற்றும் தளபதிகள் மத்தியில் நடந்த ஒரு ஒன்றுகூடலில் அவர் உரையாற்றியபோது இயக்கத்தின் நிதிநெருக்கடி பற்றி விளக்கமளித்தார். போராளி களுக்கான நாளாந்த உணவுத் தேவைகள், உடைகள், பாவனைப் பொருட்கள், மருத்துவச் செலவு என்பவற்றை நிறைவு செய்வதற்கு மாதாந்தம் பல கோடி ரூபாய் தேவைப்படுவதாகக் கூறினார். நாளாந்தம் சண்டையில் உயிரைக் குடுக்கிற போராளிகளுக்கு ஒழுங்கான சாப்பாடுகூட இயக்கத்தால குடுக்க முடியுதில்லை எனக் கூறிக் கண்ணீர் வடித்தார். அங்கிருந்தவர்களின் மனதை அவரது வார்த்தைகள் கலங்கடித்தன. பின்னரான காலப் பகுதிகளில் வன்னியில் பல பாரிய விவசாயப் பண்ணைகளை அமைப்பதற்கான அத்திவாரத்தை அவரே இட்டிருந்ததுடன் புலிகள் அமைப்பின் மீது சாதாரண மக்களுக்கு வெறுப்பேற்படுவதற்கான காரணங்களில் முக்கியமானதான வரிவிதிப்பு முறையையும் அவரே ஆரம்பித்து வைத்தார்.

    அப்போது நான் அரசியல்துறையின் கல்விப் பிரிவு மகளிர் பொறுப்பாளராகச் செயற்பட்டுக்கொண்டிருந்தேன். பொலிகண்டியில் அமைக்கப்பட்டிருந்த மகளிர் அடிப்படைப் பயிற்சி முகாமில் முப்பத்து மூன்றாம் அணியில் பயிற்சி பெற்ற இருபது பெண் போராளிகள் எனது பொறுப்பில் விடப்பட்டிருந்தனர். தென்மராட்சியில் உள்ள கனகம்புளியடிச் சந்தியில் இருந்த எமது முகாம் வட்டக்கச்சி விவசாயப் பண்ணை வளாகத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. அரசியல்துறையின் பயிற்சிக் கல்லூரியும் அவ்வளாகத்திலேயே செயற்பட்டுவந்தது. கல்விக் குழுவால் போராளிகளுக்கும், அரசியல் வேலைகளுக்காகத் தெரிவுசெய்யப்பட்டிருந்த காயமடைந்த போராளிகளுக்கும் வகுப்புகள் நடாத்தப்பட்டன. அரசியல்துறைப் போராளிகளின் ஒன்றுகூடல்களும் அங்கே இடம்பெறுவது வழக்கம். அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்¹⁰, இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் பாலகுமாரன்¹¹ உட்பட அரசியல் ஆய்வாளர்கள் சிலரும் அங்கே வகுப்புகள் நடாத்தினார்கள். 'பெண்களும் சமூகமும்' என்ற தலைப்பில் நானும் அங்கு வகுப்புகள் எடுத்திருக்கிறேன்.

    எமது கல்விக் குழுவின் பணியானது போர்க்களமுனைகள், அடிப்படைப் பயிற்சி முகாம்கள் ஆகியவற்றிற்குச் சென்று போராளிகளைச் சந்தித்து அரசியல் மற்றும் பொதுஅறிவு, இயக்க வரலாறு ஆகியவற்றை அறியத் தருவதாகும். 1995க்கு முன்பு மகளிர் படையணி ஒரே நிர்வாக அலகாகவே இயங்கி வந்தது. மகளிர் படையணியின் சிறப்புத் தளபதியே பெண்கள் அனைவருக்குமான முழுமையான அதிகாரமுள்ள அதிகாரியாக இருந்தார். அதன் பின்னரான காலப் பகுதியிலேயே மகளிர் படையணியானது மாலதி படையணியாகவும் அரசியல்துறை, நிதித்துறை, புலனாய்வுத்துறை, கடற்புலிகள் எனப் பல்வேறு அலகுகளாகவும் பிரிந்து செயற்படத் தொடங்கியது. பெண் போராளிகள் செயற்படும் களமுனைகளுக்கு அடிக்கடி செல்லக்கூடிய சந்தர்ப்பங்கள் எனக்கிருந்ததால் போராளிகளுடைய பல பிரச்சனைகளையும் என்னால் அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. கடற்புலி மகளிர் பயிற்சி முகாம் அமைந்திருந்த வடமராட்சி கற்கோவளம் கடற்கரைப் பகுதிகளுக்கும் சென்று அரசியல் வகுப்புகளை நடத்தினேன்.

    1996 ஜூலை 17ஆம் திகதி அன்று புலிகள் தமது முழுப் பலத்தையும் திரட்டி முல்லைத்தீவு இராணுவத் தளம் மீது பாரிய தாக்குதலைத் தொடுத்திருந்தனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை அண்மித்திருந்த பகுதியில் மருத்துவப் பின்தளத்தில் நானும் என்னுடனிருந்த கல்விக் குழுப் போராளிகளும் நிறுத்தப்பட்டிருந்தோம். காயமடைந்து வரும் போராளிகளின் குருதி வெளியேற்றத்தைத் தடுத்து, அவர்களைப் பின்னணியில் இயங்கும் சத்திர சிகிச்சை நிலையங்களுக்கு வேகமாக அனுப்பிவைக்கும் பணியை மேற்கொண்டிருந்தோம். 'ஓயாத அலைகள்-1'¹² எனப் பெயரிடப்பட்டிருந்த நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் முழுமையாகப் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது. அந்தச் சமரில் புலிகளும் படையினருமாக ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருந்தனர். 1996இல் வன்னிப் போர்க்களத்தின் முதலாவது பிரம்மாண்டமான வெற்றியைப் புலிகள் நந்திக்கட¹³லோரத்தில்தான் பெற்றிருந்தனர். கைப்பற்றப்பட்டிருந்த முகாமுக்கு நானும் ஏனைய போராளிகளும் போயிருந்தோம். அகன்று விரிந்துகிடந்த வங்கக்கடலின் பேரலைகள் முல்லைத்தீவுக் கரையில் மோதி எமது போராளிகளின் தீரத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன.

    வடமராட்சியின் ஆழக் கடற்பரப்பை இழந்து போயிருந்த புலிகள் 'கடலை ஆள்பவனே தரையையும் ஆளுவான்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் முல்லைத்தீவுக் கடலைத் தமது பிரதான தளமாகக்கொண்டு, கடற்புலிகளின் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தத் தொடங்கியிருந்தனர். இலங்கைத் தீவின் பெரும் பகுதிக் கடல் ஆளுமை தம் வசமே இருக்கவேண்டும் என்பதில் இயக்கம் முனைப்பாக இருந்தது. வங்கக் கடலின் சர்வதேச கப்பல் பாதையின் அனுகூலங்களையும் புலிகள் பெற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்தமையால் கனரக ஆயுதங்களையும் பீரங்கிகளை யும் வெடிபொருட்களையும் தமக்குச் சொந்தமான கப்பல்கள் மூலம் நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது. இவ்வனுகூலமான நிலை, தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த வன்னி யுத்தத்தைப் புலிகள் இயக்கத்திற்குப் பெரிதும் சாதகமாக்கி இருந்தது. கடற்புலிகளின் படையணியில் பெண் போராளிகள் ஆண்களுக்கு நிகராகக் களமுனைச் செயற்பாடுகளை முன்னின்று நடாத்தினர்.

    முல்லைத்தீவு முகாம் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஒருசில நாட்களிலேயே கிளிநொச்சி நகரத்தைக் கைப்பற்றும் நோக்குடன் 'சத்ஜெய1,2,3'¹⁴ ஆகிய தொடர் இராணுவ நடவடிக்கையை இலங்கைப் படையினர் முன்னெடுக்கத் தொடங்கினர். வட்டக்கச்சியில் அமைந்திருந்த எமது கல்விக் குழுப் போராளிகளை வேறு பாதுகாப்பான இடத்திற்கு உடனடி யாக நகர்த்த வேண்டியிருந்தது. அதே வளாகத்தில் புதிய போராளிகளின் முகாமும் அமைந்திருந்தது. அதன் பொறுப்பாளர் எனது இடத்திற்கு வந்திருந்தபோது அவருடன் நூறு புதிய போராளிகளும் அங்கிருந்தனர். போராளிகளை நகர்த்துவது பற்றி எதுவும் அதுவரையிலும் தனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்காத நிலையில் என்ன செய்வது எனப் புரியாமல் அவர் குழம்பிக் கொண்டிருந்தார். பயங்கரமான எறிகணை வீச்சுகளுடன் பரந்தன் பகுதி அதிர்ந்துகொண்டிருந்தது. தற்பாதுகாப்புக்காக நிலையெடுப்பது என்பதுகூடத் தெரியாத புதிய போராளிகளை இனியும் அங்கு வைத்துக்கொண்டிருப்பது சரியானதாக எனக்குப் படவில்லை. அந்தக் கணத்தில் அவசரமான முடிவொன்றினைப் பொறுப்பாளர்களின் அனுமதியின்றி நானே எடுக்க வேண்டியதாக இருந்தது. அப்புதிய போராளிகளின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் நான் எடுத்த முடிவுக்கான தண்டனையை நான் தலைமையிடமிருந்து பெற்றுக்கொள்ள நேரிடும் என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும் நான் அப்போராளிகளின் உயிரைக் காப்பாற்றும் நோக்குடனேயே அந்த முடிவைத் தன்னிச்சையாக மேற்கொண்டேன்.

    அடிப்படைப் பயிற்சி முகாம் நிர்வாகத்தினர் இன்னும் பொறுப்பெடுத்திருக்காத காரணத்தால் பயிற்சிச் சீருடைகள் கூட அப்போராளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. வீட்டி லிருந்து வந்த கோலமாகவே அவர்கள் நின்றிருந்தனர். அது மாலைப் பொழுதாக இருந்த காரணத்தால் அவர்களை அவ்வாறான தோற்றத்துடன் வீதியில் அழைத்துச் செல்வது பெரிய பிரச்சனையாக இருக்காது என எண்ணினேன். எனவே என்னுடனிருந்த இருபது போராளிகளையும் அவர்களுடன் கலந்து சிறு அணிகளாகப் பிரித்தேன். இந்த நெருக்கடி நேரத்தில் வாகனங்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்க முடியாது. எனவே வீதியில் கால்நடையாகவே அழைத்துச் செல்வது என்ற முடிவுடன் வட்டக்கச்சி மகாவித்தியாலய முன்வீதியில் அவர்களைச் சிறு அணிகளாக நகர்த்தி இரணைமடுவின் குளக்கட்டு அமைந்திருக்கும் பகுதியின் கீழ் வீதியைக் கடந்து இரணைமடுச் சந்தியை அடைந்தோம். ஏ9 பிரதான வீதியூடாக முறிகண்டியை நோக்கி மீண்டும் எமது நடைப் பயணத்தைத் தொடர்ந்தோம். முறிகண்டியை அடைந்துவிட்டோமானால் ஏ9 பாதையிலிருந்து விலகிக் காட்டுப் பாதையூடாக எறிகணை வீச்சின் தாக்குதல் எல்லைக்கு அப்பால் உள்ள அக்கராயன் காட்டுப் பகுதியை அடைந்துவிடலாம் என்ற நோக்குடன் நடந்தோம். புதிய போராளிகள் ஓடியோடி நடந்து வந்ததினால் களைத்துப் போய் வியர்வையில் தோய்ந்திருந்தார்கள். எறிகணைகள் மிக அண்மையாக விழுந்து வெடித்துக்கொண்டிருந்ததால் அவர்களில் பலர் பயத்தில் உறைந்திருந்தார்கள். முறிகண்டி சந்தியிலிருந்து அக்கராயன் செல்லும் வீதிக்கு இறங்கி நடந்து சென்றபோது, யூனியன் குளத்தை அண்மித்த பகுதியில் அரசியல்துறைப் பெண் போராளிகள் தெருவோரமாக ஒரு கொட்டகை அமைத்துத் தங்கியிருந்ததை எதேச்சையாகக் கண்டோம். எனக்கு நன்கு அறிமுகமான வினோ என்ற பெண் போராளி அம்முகாமுக்குப் பொறுப்பாக இருந்தார். அவருடைய உதவியுடன் சற்றுப் பாதுகாப்பான காட்டுப் பகுதியில் அந்தப் புதிய போராளிகளை இரவு தங்க வைத்தோம். அண்மித்த பகுதிகளில் குடியிருந்த மக்களின் உதவியுடன் வினோ எமக்கான இரவு உணவைச் சமைத்துத் தந்தார்.

    மறுநாள் காலை எமது அரசியல்துறை மகளிர் பொறுப்பாள ரான லெப்.

    Enjoying the preview?
    Page 1 of 1