Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Natraj Maharaj
Natraj Maharaj
Natraj Maharaj
Ebook528 pages4 hours

Natraj Maharaj

Rating: 0 out of 5 stars

()

Read preview
Languageதமிழ்
Release dateJan 7, 2017
ISBN9789352441877
Natraj Maharaj

Related authors

Related to Natraj Maharaj

Related ebooks

Reviews for Natraj Maharaj

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Natraj Maharaj - Devibharathi

    மகராஜ்

    ஆசிரியரின் பிற நூல்கள்

    1. 'வீடென்ப' (சிறுகதைகள், 2013)

    2. 'அற்ற குளத்து அற்புத மீன்கள்' (கட்டுரைகள், 2012)

    3. 'நிழலின் தனிமை' (நாவல், 2011)

    4. 'பிறகொரு இரவு' (நெடுங்கதைகள், 2009)

    5. 'புழுதிக்குள் சில சித்திரங்கள்' (கட்டுரைகள், 2004)

    6. 'மூன்றாவது விலா எலும்பும் விழுதுகளற்ற ஆலமரமும்' (நாடகம், 1996)

    7. 'கண் விழித்த மறுநாள்' (கவிதைகள், 1994)

    8. 'பலி' (சிறுகதைகள், 1993)

    ஆசான் கோவை ஞானிக்கும்

    நண்பர் கவிஞர் இரா. சின்னசாமிக்கும்

    நன்றி

    முன்னுரை எழுதிய கவிஞர் சுகுமாரனுக்கும்

    நாவலைச் செப்பனிட உதவிய

    ஜி. குப்புசாமி, த. அரவிந்தன், ந. செல்லப்பா,

    மண்குதிரை ஜெய்குமார், அடவி முரளி ஆகியோருக்கும் வெவ்வேறு தருணங்களில் இந்த நாவலுக்கான ஆலோசனைகளை வழங்கிய குற்றாலம் எஸ். தர்மராஜனுக்கும் நாவலை எழுதும் தருணத்தில் துணைநின்ற

    மனைவி ரத்தினாம்பாளுக்கும்

    காலச்சுவடு ஆசிரியர் கண்ணனுக்கும்

    ஆசிரியர் குழுவைச் சேர்ந்த எஸ்.வி.ஷாலினிக்கும்

    வடிவமைத்த சுபாவுக்கும் மணிகண்டனுக்கும்.

    முன்னுரை

    'வரலாறு எல்லாவற்றையும் சரி செய்யும்', 'வரலாற்றின் கணக்கு சரி செய்யப்பட்டுவிடும்', 'உரிய நேரத்தில் உரியவர்களால் உரிய விதத்திலேயே வரலாற்றின் கணக்கு சரி செய்யப்படும்' - என்று நாவலில் வெவ்வேறு தொனியில் திரும்பத் திரும்ப இடம்பெறும் வாசகம் முக்கியக் கதை மாந்தர்களின் கூற்றாகவும் அதன் விளைவாக முதன்மைப் பாத்திரமான 'ந'வின் உட்கிடக்கை யாகவுமே மாறுகிறது. இந்த நிர்ணய வாசகமே 'நட்ராஜ் மகரா'ஜின் மையம்.

    காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடி உயிர்நீத்த, நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரன், மாவீரன் காளிங்க நடராஜ மகாராஜாவின் உயிருள்ள நேரடி வாரிசான, ஒரே வாரிசான பிரின்ஸ் - நட்ராஜ் மகராஜ் ஓ என்னும் பெயரையுடைய சிறிய, மிகச்சிறிய கிராமத்தில் வெறும் நவாகவும் ந என்னும் பெயரையுடைய சத்துணவு அமைப்பாளராகவும் வாழ்ந்துகொண்டிருக்கிறான். வரலாற்றில் நேர்ந்துவிட்ட இந்தப் பிழையான கணக்கு எப்படி சரி செய்யப்படுகிறது? அந்த நடவடிக்கையின் நேர்விளைவுகளும் எதிர்விளைவுகளும் என்னென்ன? இந்தக் கேள்விகளுக்குக் கண்டடையப்படும் பதில்களே நாவலின் கதையாடலை நிர்ணயிக்கின்றன. ஒரே சமயத்தில் இந்தக் கதையாடல் எதார்த்தமானதாகவும் வரலாறாகவும் வரலாற்றின் மீதான எள்ளலாகவும் நகர்ந்து இறுதியில் சமகால அவலமாக முற்றுப் பெறுகிறது.

    தேவிபாரதியின் அநேகமாக எல்லா ஆக்கங்களையும் வாசித்திருப்பவன் என்ற முறையில் ஒரு கருத்தை முன்வைக்கத் தோன்றுகிறது. அதிகம் பேசப்பட்ட அவருடைய சிறுகதையான 'பலி' முதல் முந்தைய நாவலான 'நிழலின் தனிமை' வரையான அனைத்துப் புனைவுகளும் வரலாற்றின் பிழையை ஆய்வு செய்பவை எனலாம். நடந்து முடிந்த ஒன்றின் பிற்காலத்திய அல்லது சமகாலத்திய ஆய்வுகள். 'பலி' சிறுகதையில் தங்களை ஒரு காலத்தில் ஒடுக்கிய பிரிவைச் சேர்ந்த பெண்ணிடம் ஒடுக்கப்பட்ட ஒருவன் வஞ்சம் தீர்த்துக் கொள்கிறான். 'ஊழி' கதையில் மணிமேகலையின் துறவுக்கு முந்திய சம்பவங்கள் மறு ஆக்கம் பெறுகின்றன. 'பிறகொரு இரவு' கதையில் காந்தியின் கையறுநிலை பேசப்படுகிறது. 'வீடென்ப . . .' கதையில் சிதிலமாகிப் போன காலம் விசாரணை செய்யப்படுகிறது. நாவலான 'நிழலின் தனிமையில்' முன்னர் நடந்த அசம்பாவிதம் மீண்டும் நினைக்கப்படுகிறது, குறிப்பிட்ட இந்தப் படைப்புகள் அனைத்தும் கடந்துபோன ஒன்றை மீண்டும் நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்து அவற்றின் விளைவுகளைப் பற்றியே ஆய்வு செய்கின்றன. நடந்து முடிந்த பிழையை நிகழ்காலம் எப்படிச் சரி செய்கிறது என்றோ கடந்த காலத்தின் நிலை மதிப்பில் மறைந்திருக்கும் பிழையை எப்படி நிகழ்காலம் புரிந்துகொள்கிறது என்றோ பகுத்துப் பார்க்கிறது. இந்தப் பகுப்பாய்வின் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு 'நட்ராஜ் மகராஜ்'.

    நாவலின் முதன்மைப் பாத்திரமான ந சாதாரணன். அரசுப் பணியும் குடியிருக்கக் குறைந்தபட்ச வசதியுள்ள இருப்பிடமும் கிடைத்தால் சொர்க்கம் என்று யோசிக்கிற எளியவன். ஒரு நிர்ணயத் தருணத்தில்தான் சாதாரணனோ எளியவனோ அல்ல என்று தெரிந்துகொள்கிறான். அல்லது அவனுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அவன் மகத்தான் ஒரு பரம்பரையின் சந்ததி என்றும் வரலாற்றின் உதாசீனத்தால் மரபுப் பெருமை அறியாமல் இருக்கிறான் என்றும் எடுத்துக்காட்டப்படுகிறது. தான் மாவீரன் காளிங்க மகராஜாவின் வாரிசு என்பதை ந ஆரம்பத்தில் சந்தேகிக்கிறான். முன்னால் வைக்கப்படும் மறுக்க முடியாத ஆதாரங்களும் அவனது உட்கிடக்கையும் மெல்லமெல்ல அந்த 'மாபெரும் உண்மை'யை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு அவனைக் கொண்டு செல்கின்றன. அந்த உண்மையை நிலைநிறுத்திக் கொள்ள அவன் படும் பாடுகள் முதலில் எதார்த்தமாகவும் தொடர்ந்து பகடியாகவும் இறுதியில் காவியச் சோகமுள்ள அவலமாகவும் நாவலில் சித்திரிக்கப்படுகின்றன. நாவலின் முதல் வரியிலேயே இந்த மூன்று இயல்புகளையும் ஆசிரியர் வெளிப்படுத்தி விடுகிறார். ந வை வெறும் பள்ளிக்கூட சத்துணவு ஒருங்கிணைப்பாளாராக, சாதாரணனாகச் சொல்லுவதில்லை. அப்படி அறிமுகப்படுத்தியிருந்தால் இந்த நாவல் எளிமையான எதார்த்தவாத நாவலின் உருவத்தைக் கொண்டிருக்கும். தான் ராஜ பரம்பரையின் வாரிசு என்று அறிந்து கொண்டவனாகவே -

    ந என்பவன் வெறும் ந வோ, ந என்னும் பெயரையுடைய சத்துணவு அமைப்பாளரோ அல்ல; நட்ராஜ் மகராஜ் - என்று தெரிந்துகொண்டவனாகவே முன்னிருத்தப்படுகிறான். இந்த அறிமுகமே நாவலின் வடிவையும் போக்கையும் தீர்மானிக்கிறது. எதார்த்தவாதக் கதையாடலாக அல்லாமல் புனைவின் அதிகபட்ச சாத்தியங்களைக் கோரும் படைப்பாக மாற்றுகிறது. நாவலின் இறுதியை மறக்க முடியாத ஒன்றாகவும் மறு சிந்தனைக்குரியதாகவும் ஆக்குகிறது. ந வை வெறும் நவாக அல்லாமல் நட்ராஜ் மகராஜாக அறிமுகப்படுத்துவதில் ஆசிரியரின் சமகால விமர்சனமும் தொனிக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் இன்று எல்லாத் தரப்புகளும் தம்மை ஆண்ட பரம்பரையாகவே எடுத்துக்காட்ட விரும்புகின்றன. அந்த விருப்பத்தின் மீதான படைப்பாளியின் விமர்சனமாக இதைச் சொல்லலாம்.

    தேவிபாரதியின் இதுவரையான படைப்புகளிலிருந்து இங்கே மேற்கோளாகச் சொல்லப்பட்டவற்றில் மேற்சொன்ன விமர்சனம் தொடர்ச்சியாகவே இடம் பெறுகிறது. 'நட்ராஜ் மகரா'ஜில் அது மிகவும் கூர்மை பெற்றிருக்கிறது. ஒருவிதத்தில் படைப்பாளியின் கருத்தியல் நோக்கு அல்லது அரசியல் நோக்கு இது. படைப்பாளியின் பணி அரசியலின் வரலாற்றை அலசுவதல்ல; மாறாக வரலாற்றின் அரசியலைப் பகுத்துப் பார்ப்பதே. அதன் தெளிவான உதாரணம்: 'நட்ராஜ் மகராஜ்'.

    துணைப்பிரதிகள் கொண்டவை தேவிபாரதியின் கதைகள். குறிப்பாக அவரது சமீபத்திய ஆக்கங்கள். எல்லாருக்கும் நன்கு அறிமுகமான நல்லதங்காள் கதையை மீளச் சொல்லும் 'உயிர்த்தெழுதலின் சாபம்' நெடுங்கதை, அதற்குள் சமகாலப் பொருத்தமுடைய துணைப் பிரதிகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. 'பிறகொரு இரவு'ம் சமகாலச் சிக்கல்கள் பற்றிய துணைப் பிரதிகளைக் கொண்டது. 'நிழலின் தனிமை' நாவலும் இதே போன்றதுதான். பழி வாங்கும் கதைபோலத் தோன்றும் நாவலின் ஆழத்தில் உளவியல் சார்ந்த கருத்தோட்டங்கள் மறைந்திருக்கின்றன. இந்தப் படைப்புகள் மூலம் வசப்பட்ட தன்னுடையதான கதையாடலை தேவிபாரதி 'நட்ராஜ் மகரா'ஜில் உச்சமாக நிகழ்த்தியிருக்கிறார்.

    நட்ராஜ் மகராஜ் நாவலில் நேரடியான முறையில் சொல்லப்படுவது ந வின்கதை. அதில் மறைமுகமாக அவனது வம்சத்தின் கதையும் சமகால அரசியலும் துணைப் பிரதிகளாக இடம்பெறுகின்றன. இன்னொரு மறை பிரதியும் இந்த நாவலில் இருக்கிறது என்பதை நாவல் குறிப்பிடும் நிலப்பகுதியுடன் தொடர்புள்ள வாசகர்கள் இனங்காணக் கூடும்.

    இன்றைய தேதிக்கு தேவிபாரதி என்ற எழுத்தாளரின் ஆக மேலான படைப்பு 'நட்ராஜ் மகராஜ்' என்று எண்ணுகிறேன். கதையாடலில் நிகழ்த்தியிருக்கும் புதுமையிலும் கதைமாந்தர்களை உருவாக்கியிருக்கும் நேர்த்தியிலும் மொழியைப் பயன்படுத்தியிருக்கும் துல்லியத்திலும் செழுமையிலும் இந்த நாவல் அவரது படைப்பாற்றலின் உச்சத்தைக் காட்டுகிறது. இழை விலகாமல் நெய்ததுபோல நாவலில் எதார்த்தமும் கற்பனையின் மாயமும் பின்னியிருக்கின்றன.

    ந வைக் குறிப்பிடும்போதும் இதர பாத்திரங்களைக் குறிப்பிடும்போதும் அவர்களது பெயர்களின் முதல் எழுத்துக்கள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன. இடங்களும் ஒற்றை எழுத்தில் சுட்டப்படுகின்றன. இவை முதலில் வேடிக்கையாகவும் பின்னர் எச்சரிக்கைக் குறிப்பாகவும் பிறகு இயல்பானதாகவும் ஆகின்றன. ந என்பவன் வெறும் நவோ ந என்னும் பெயரையுடைய சத்துணவு அமைப்பாளரோ அல்ல என்றும் வ என்னும் மனைவி, பூ என்னும் பேராசிரியர், ஸ் என்னும் உதவியாளர் என்றும் வரும் சுட்டல்கள் முதலில் வேடிக்கையாகத் தொனிக்கின்றன. தொடர்ந்து வாசிக்கும்போது ஆசிரியர் எச்சரிக்கை காரணமாகவே இப்படிப் பயன்படுத்துகிறார் என்ற தெளிவு ஏற்படுகிறது. இறுதி வரை தொடரும் இந்தப் பயன்பாடு நாவலுக்குள்ளான வாசக சஞ்சாரத்தில் பழகி இயல்பானதாகவே ஆகிறது. உண்மையில் வாசிப்பில் அலுப்பை ஏற்படுத்தக் கூடியது இது. ஆனால் அப்படி நிகழாமல் இந்தக் கூறியது கூறல் கவிதையில் மறுபடிகளாகவோ சுருதி மீட்டலாகவோ அனுபவமாகின்றன. அப்படி அனுபவப்படச் செறிவான கதையாடலே காரணம்.

    ந வை முன்னிருத்திச் சொல்லப்படும் நாவல் அவனை விட்டு விலகுவதே இல்லை. அவன் இடம்பெறாத காட்சிகள் ஒன்றுகூட நாவலில் இல்லை. அவன் விலகியிருப்பதாக வரும் சந்தர்ப்பங்களிலும் அவன் சூக்குமமாக இருக்கிறான். அல்லது அந்த சந்தர்ப்பத்தின் முடிவில் தூலமாக வெளிப்படுகிறான். ந வின் பிரதி வினைகளிலிருந்தே பிற பாத்திரங்களை வாசகர் தெரிந்துகொள்கிறார். இந்த ஒருமை நாவலுடன் ஒன்ற உதவுகிறது. அதை தேவிபாரதியின் மொழி சாத்தியமாக்குகிறது. கதைச் சந்தர்ப்பத்தை விரித்தும் ஆழ்ந்தும் உணரச் செய்யும் மொழி. எதார்த்தமும் அதிபுனைவுமான கதைப் போக்கை திட்பமாக நிலைப்படுத்த மொழியால் எவ்வளவு முடியுமோ அத்தனை சாத்தியங்களையும் ஆசிரியர் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார். ந தனது முன்னோன் ஆன மாவீரன் காளிங்க நடராஜ மகாராஜாவாக உருமாற்றப்படும் விதூஷகத் தருணத்திலும் அந்த உருமாற்றம் மூலம் சமூகம் திருவிழாக் கோலம் கொள்ளும் பகுதியிலும் மொழி அபாரமாகத் துலங்குகிறது - பிரகாசமான மின்னலின் காட்சிக் குளுமையும் விளைவின் தகிப்பும்போல.

    வரலாற்றை மனிதர்கள் உருவாக்குகிறார்களா? வரலாறு மனிதர்களை உருவாக்குகிறதா? என்ற விடை காண முடியாத கேள்விக்கு பதில் தேடும் முயற்சியாக இந்த நாவலைச் சொல்லலாம். ந என்பவன் வெறும் ந என்பவனாகவோ ந என்னும் பெயருடைய சத்துணவு அமைப்பாளராகவோ இருக்க முடிவதில்லை. காலம் மென்று செரித்த அரண்மனையின் சிதிலங்களுக்கு மத்தியில் வாழும் தான் மகத்தான அதிகாரம் கொண்டிருந்த பரம்பரையின் கண்ணி என்று உணர்கிறான். அவனது நிகழ்கால இருப்பு அதை மறுக்கிறது. ஆனால் சொல்லப்பட்ட சரித்திரமும் அதை மெய்ப்பிக்க வைக்கப்படும் சான்றுகளும் அவனை நிகழ்காலத்திலிருந்து மீட்க முடியாத பொற்காலக் கனவுக்கு இட்டுச்செல்கின்றன. அதை அவன் மெல்ல மெல்ல ஏற்கவும் ஆயத்தமாகிறான். தன்னை மகாராஜா என்று நம்பவும் நிரூபிக்கவும் விரும்புகிறான். அது அதிகாரம் மிகுந்த இருப்பு. பெருமிதத்துக்குரிய வாழ்க்கை. அந்த வாழ்க்கையை எட்டிவிடும் பிரயத்தனத்தில் ந என்பவன் தன்னை இழக்கிறான். தனது நிகழ்காலத்தை இழக்கிறான். வரலாற்றின் கேலிச் சித்திரமாக மாறுகிறான்.

    இது வரலாறு மனிதனுக்கு அளிக்கும் துயரமா? மனிதன் வரலாற்றுக்கு ஏற்படுத்தும் இக்கட்டா? இந்தக் கேள்விதான் 'நட்ராஜ் மகரா'ஜைக் களத்தை மிஞ்சிய படைப்பாக்குகிறது. காலத்தையொட்டிய படைப்பாகவும் அடையாளப்படுத்துகிறது. எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும் தவிர்க்க இயலாத, தவிர்க்கக் கூடாத கேள்வி இது. இல்லையா?

    சுகுமாரன்

    திருவனந்தபுரம்

    9 மே 2016

    பகுதி-I

    1

    943 மாணவ மாணவியர் பயிலும் தா என்னும் பெயரையுடைய ஒரேயொரு கிராமத்தின் ஒரேயொரு அரசு மேல்நிலைப் பள்ளியின் ஒரேயொரு சத்துணவு அமைப்பாளரான ந, தான் 1802இல் கிழக்கிந்திய கம்பெனியாரால் ச என்னும் மலைநகரில் தற்போதும் இருந்துகொண்டிருப்பதாகக் கருதப்படும் மூப்புற்ற சாலையோரப் புளியமரமொன்றில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் மாவீரன் காளிங்க நடராஜ மகாராஜாவின் உயிருள்ள நேரடியான ஒரே வாரிசு என்பதைத் தெரிந்துகொண்டபோது கிறித்து பிறந்து 1999 ஆண்டுகளும் நான்கு மாதங்களும் ஒன்பது நாள்களும் கடந்திருந்தன. இரண்டு வாரங்களுக்கு முன்புதான் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை தொடங்கியிருந்தது. தொடக்கப் பள்ளியில் பயிலும் தன் குழந்தைகள் இருவரையும் செ என்னும் நகரில் வசிக்கும் கைத்தறி நெசவாளியான மைத்துனரின் வீட்டுக்கு அனுப்பிவிட்டு வ என்னும் பெயரையுடைய மனைவியின் உதவியோடு ஓ என்னும் சிறிய, மிகச் சிறிய கிராமத்தில் தான் வெகுகாலமாக வசித்துவரும் அரண்மனையைக் கைவிட்டுவிட்டு அரசால் ஒதுக்கப்பட்ட இலவசத் தொகுப்பு வீட்டைக் கட்டிக்கொள்வதற்கான பணிகளைத் தொடங்கியிருந்தான். அஸ்திவாரம் அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. இரண்டு சித்தாள்களுக்குரிய கூலி மிச்சமாகுமென்பதாலும் அப்போது கோடை விடுமுறை என்பதாலும் நவும் வவும் மேஸ்திரியுடனும் அவனுடன் வந்திருந்த இரண்டு சித்தாள்களுடனும் அஸ்திவாரம் அமைக்கும் பணியில் சேர்ந்து கொண்டிருந்தனர். சித்தாள் சேற்றைக் குழைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தாள். நவும் வவும் அதைச் சுமந்துகொண்டு போய் அஸ்திவாரத்தை மெத்திக்கொண்டிருந்த மேஸ்திரியிடம் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். எல்லா உடல்களிலும் சேறு படிந்திருந்தது. போதிய அனுபவம் இல்லாததால் ந தலை, முகம், கைகால்களிலெல்லாம் சேற்றை அப்பிக்கொண்டிருந்தான். ந என்பவன் வெறும் நவோ ந என்னும் பெயரையுடைய சத்துணவு அமைப்பாளரோ அல்ல, நட்ராஜ் மகராஜ் என்பதை நவுக்கும் அவனுடைய மனைவி வவுக்கும் குழந்தைகளுக்கும் ஓ என்னும் பெயரையுடைய அந்தக் கிராமத்துவாசிகளுக்கும் தெரிவிப்பதற்காகப் புதுதில்லியிலியின் நே என்னும் பெயரையுடைய புகழ்பெற்ற பல்கலைக்கழகமொன்றின் புகழ்பெற்ற வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பூவும் அவருடைய உதவியாளரும் பேரழகியுமான ஸ்ஸும் அவன் வெகு காலமாக வசித்துவந்த அரண்மனையின் முன்னால் வந்து நின்றபோது நவும் அவனுடைய பட்டத்துராணியான வவும் சேறு படிந்த உடல்களுடனேயே அவர்கள் முன்னால் நிற்க வேண்டியிருந்தது.

    2

    ந வசித்துவந்த அரண்மனையை அரண்மனை எனக் குறிப்பிடுவதற்குக் காரணம் அது ஒரு அரண்மனை என்பதுதான். ஊர்க்காரர்களும் அதை அரண்மனை என்றே அழைத்தனர்.

    ஆனால் பாழடைந்த அரண்மனை.

    அதன் எண்ணற்ற சிதைந்துபோன தூண்களும் இற்று வீழ்ந்துவிட்ட ஆலோசனை மண்டபங்களும் மண்மூடிப் போய்விட்ட தர்பாரும் ராணிகளும் கூத்திப் பெண்களும் சேடிகளுமற்ற அந்தப்புரமும் உறக்கமஞ்சக் கூடங்களும் உடும்புகளும் முயல்களும் கீரிகளும் பாம்புகளும் இன்னும் எண்ணற்ற சிறு பிராணிகளும் பறவைகளும் வசிக்கும் குதிரை லாயமும் அடர்ந்த புதர்களாலும் முதிர்ந்த விருட்சங்களாலும் மூடப்பட்டிருந்தன. தர்பார் மண்டபத்தின் பதினெட்டுத் தூண்களில் எஞ்சியிருந்தவை மூன்று மட்டுமே. இற்றுச் சரிந்து போய்விட்ட அவற்றைப் பிரண்டைக்கொடிகளும் கோவைக்கொடிகளும் ஊணாங்கொடிகளும் தம் வலுவான, முறுக்கேறிய கரங்களால் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தன. பிராணிகளும் பறவைகளும் தமக்கென எடுத்துக்கொண்டவை போக எஞ்சியிருந்த மிகச் சிறிய இரண்டு அறைகளில் வெகு காலமாக வசித்துவந்தான் ந.

    அவன் வசித்துவந்த சிதிலமடைந்த இரு சிறிய அறைகளும் முன்பு அரண்மனையின் வாயில் காவலர்கள் தங்கியிருந்து காவல்காத்து வந்த இடங்களாயிருந்திருக்க வேண்டும். நுழைவாயிலை யொட்டி இடமொன்றும் வலமொன்றுமாகக் கனத்த, விரிசலுற்ற, காரை பெயர்ந்த, பழுப்பேறிய சுவர்களையுடைய தலா இருநூறு சதுரஅடி கொண்ட எதிரெதிரான இரண்டு பாழடைந்த அறைகள். முன்புறம் இரண்டரையடி உயரமுள்ள திண்ணையும் இரண்டு மூலைகளிலும் சாய்ந்துகொள்ளத் தோதுவான கருங்காலி மரத்தாலான இரு தூண்களும் இருந்தன. திண்ணையின் இடதோரத்தை வ சமையல்கூடமாகப் பயன்படுத்தி வந்தாள். காற்றுத் தடுப்பான்களாக இரு சாக்குப் படுதாக்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. நடுவே அகழியைப் போன்ற கற்பாலங்களாலான அகன்ற, பெரிய பாதை. அதில் வசித்துவந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நுழைவாயிலைக் கடந்து அந்தப் பாதையின் வழியாகத்தான் அரண்மனைக்குள் நுழைந்திருக்க வேண்டும். ராஜாவோ மந்திரிப் பிரதானிகளோ சேனாதிபதிகளோ அரண்மனைக்குள் நுழையும்போதும் வெளியே வரும்போதும் அவற்றில் வசித்துவந்த காவலர்கள் விறைப்பாக நின்று அவர்கள் ஒவ்வொருவரையும் பணிந்து வணங்கியிருப்பார்கள் அவர்களில் யாராவது ஆங்கில பாணியில் விறைப்பாக நின்று சல்யூட் அடித்திருப்பதற்கும் வாய்ப்புண்டு. அவர்களது கையில் ஈட்டிகள் இருந்திருக்க வேண்டும். இடைகளில் கூர்முனை கொண்ட வாள்கள் தொங்கவிடப்பட்டிருந்திருக்கலாம். எல்லோருமே திடகாத்திரமான தோள்களையும் உறுதியான கைகளையும் தீர்க்கமான விழிகளையும் முறுக்கிவிடப்பட்ட பெரிய மீசைகளையுமுடையவர்களாக இருந்திருப்பார்கள்.

    அரண்மனைக்குள் நுழைய முயலும் தீயவர்களையும் பகைவர்களையும் அவர்கள்தான் முதலில் எதிர்கொண்டவர்களாக இருந்திருக்க வேண்டும். அதன் காரணமாகவே பகைவர்களின் முதற்பலிகளாகவும் அவர்களே இருந்திருக்கக்கூடும். அந்த அரண்மனையும் அதன் தர்பாரில் வீற்றிருந்த ராஜாக்களும் அவர்களுடைய குடையின் கீழிருந்த ராஜ்ஜியமும் அவற்றின் குடிகளும் சந்தித்த எல்லா நல்லது கெட்டதுகளுக்கும் அவர்கள் சாட்சியங்களாக விளங்கியிருந்திருப்பார்கள். அந்த அரண்மனையின் வரலாறு எங்கே செல்வதாக இருந்திருந்தாலும் அவர்களைக் கடந்துதான் சென்றிருக்க வேண்டும். எந்த அதிகாரமும் இருந்திருக்காவிட்டாலும் அவர்களே அவற்றின் தொடக்கமாகவும் முடிவாகவும் இருந்திருக்கமுடியும். வரலாற்றின் ஏதோ ஒரு புள்ளியில் சரிந்துபோய்விட்ட அந்த அரண்மனையில் முற்றாக உருக்குலைந்து போகாமல் எஞ்சியிருந்தவை அந்தக் காவல்கூண்டுகள்தாம்.

    ந அவற்றில்தான் வெகுகாலமாக வசித்து வந்தான். வெகுகாலமாக என்றால் உண்மையிலேயே வெகுகாலமாக. அந்தக் காவல்கூண்டுகளில் ஒன்றில்தான் சரியாக முப்பத்து நான்காண்டுகளுக்கு முன்னால் ந பிறந்தான். அவற்றின் திண்ணைகளில் தவழ்ந்தான். அவற்றின் உயரமான படிகளில் ஏறியும் இறங்கியும் நடை பயின்றான். அவனும் அவனுடைய பால்ய நண்பர்களும் பாழடைந்து போன அந்த அரண்மனையின் சிதிலங்களுக்குள் ஓடிப்பிடித்து விளையாடினார்கள். பட்டாம்பூச்சிகளும் குருவிக்குஞ்சுகளும் பிடித்துத் திரிந்தார்கள். ந வசித்துவந்த அந்த இரு காவல்கூண்டுகளில் ஒன்றை இரண்டாண்டுகளுக்கு முன்புவரை அவனுடைய வயதான தந்தை பயன்படுத்தி வந்தார். பக்கவாதத்தால் தாக்கப்பட்டு ஆறேழுவருடங்கள் வரை வெளியுலகைத் தீண்டாமல் அவ்வறையிலேயே கிடைகொண்டு கிடந்த அந்த மனிதர் பயன்படுத்திய கயிற்றுக்கட்டிலும் கந்தலாகிப்போன போர்வையும் இன்னுங்கூட அதன் ஒரு மூலையில் கிடந்தன. இரண்டு வருடங்களாகியும் அந்த அறையைவிட்டு வெளியேறியிராத அவரது மூத்திர நெடியை நவோ அவனுடைய மனைவி வவோ அவர்களது குழந்தைகளோ ஒருபோதும் உணர்ந்ததில்லை. அந்த வீட்டுக்கு வரும் அந்நியர்களில் யாராவது அதை உணர்ந்து மூக்கைச் சுழித்துக்கொள்ளும்போதும் அவர்களில் இங்கிதமற்ற யாராவது ஒருவர் அதை அவர்களுக்குச் சுட்டிக்காட்ட முயலும்போதும் இருவரும் அவரைக் குழப்பமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். பாழடைந்துபோன அந்த அரண்மனையில் தான் பிறக்க நேர்ந்ததற்கும் பிறகு அதன் இடிபாடுகளுக்கிடையே வசிக்க நேர்ந்ததற்குமான காரணங்களையோ பாழடைந்துபோன அந்த அரண்மனைக்கும் தனக்கும் என்ன உறவு என்பதையோ ந ஒருபோதும் யோசித்துப்பார்க்க முயன்றதில்லை.

    3

    எனினும் வ என்னும் பெயரையுடைய தன் மனைவியோடும் ஆணும் பெண்ணுமான இரு பிள்ளைகளோடும் அந்த அரண்மனையில் வசித்துவந்தான் ந.

    அவனுடைய தந்தையின் மூத்திரநாற்றம் வீசும் அறைக்கு எதிரிலிருந்த மற்றொரு அறையில்தான் மிகச்சரியாகப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு ந தன் பெண்டாட்டி வவுடன் இல்லற வாழ்வைத் தொடங்கியிருந்தான். அப்போது அவனுடைய தாய் உயிரோடு இருந்தாள். கல்யாணத்திற்கு எட்டுநாள்கள் முன்னதாகவே அதன் கனத்த சுவர்களைப் பூசிப் பசுஞ்சாணத்தால் தரையை மெழுகியிருந்தாள். வாசலில் இருந்த முதிர்ந்த கொன்றை மரம் அப்போது தன் எண்ணற்ற கிளைகளிலிருந்து குருதிச் சிவப்பான பூக்களை உதிர்த்துக்கொண்டிருந்தது. அவ்வளவு மோசமாகச் சிதைந்து போயிருக்காத நுழைவாயிலில் படர்ந்திருந்த இருள்வாசிக் கொடிகள் பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தன. அவற்றிலிருந்த பூக்களைச் சேகரித்துத் தன் மருமகளுக்காகத் தொடுத்து வைத்திருந்த அவனுடைய தாய், வீடு முழுக்க அவற்றின் நறுமணத்தைப் படரவிட்டிருந்தாள்.

    அப்போது ந வெறும் நவாக இருந்தான். ந என்பவன் வெறும் ந அல்ல, நடராஜ் மகராஜ் என்னும் வரலாற்று உண்மை அப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. அதற்கான ஆராய்ச்சியைப் பேராசிரியர் பூ அப்போது தொடங்கியிருக்கவேயில்லை.

    அப்போது அ என்னும் பெயரையுடைய சிறுநகரிலிருந்த பைனான்ஸ் கடை ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்தான் ந. பைனான்ஸ்கடை என்றால் சுற்றுப்புறக் கிராமங்களில் வசிக்கும் ஏழை எளியவர்களுக்கும் சிறு, நடுத்தர விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் அதிக வட்டிவீதத்தில் கடன் தரும் ஒரு நிதிநிறுவனம்.

    மேலாளர் என்றால் காலையில் ஒன்பதுமணிக்கு அவன் வசித்துவந்த ஓ என்னும் பெயரையுடைய சிறிய, மிகச் சிறிய கிராமத்திலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அ என்னும் பெயரையுடைய அச்சிறுநகரின் சந்தைத்திடலுக்கு அருகே நெடுஞ்சாலையில் இருந்த மூன்று அடுக்குகளையுடைய வணிக வளாகத்தின் முதல் அடுக்கில் இருக்கும் கடைக்குப் போய்விட வேண்டும். கடையின் ஷட்டரைத் திறந்து முந்தைய நாள் இரவிலிருந்து அதனுள் அடைபட்டுக்கிடக்கும் புழுக்கமான காற்றை வெளியேற்றிவிட்டுக் குப்பைகளைப் பெருக்கிச் சுத்தம்செய்து மேசைவிரிப்புகளை ஒழுங்குபடுத்திப் பொதுமேலாளரது இருக்கையின் மீது போர்த்தப்பட்டிருக்கும் தேங்காய்ப்பூ துவாலையை உதறிச் சுருக்கங்களை அகற்றிப் போர்த்திவைக்க வேண்டும். சுவரில் பொருத்தப்பட்டிருந்த ஏழுமலையான் படத்துக்கும் மகாலட்சுமியின் படத்துக்கும் தலா ஒரு முழ நீளமுள்ள பூச்சரங்களைத் தொங்கவிட்டு ஊதுபத்தி கொளுத்திவைத்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டு விபூதி துலங்கும் நெற்றியுடன் பணிகளைத் தொடங்க வேண்டும். பொது மேலாளர் காலை பத்துமணிக்கு மேல் மாலை ஐந்துமணிக்குள் அவருக்கு வசதிப்படும் ஏதாவதொரு நேரத்தில் வருவார்.

    பொது மேலாளரின் வருகையைப் பற்றிக் கவலைப்படாமல் அவரது மேசையில் உள்ள பிளாஸ்டிக் குவளையில் தண்ணீரை நிரப்பி வைத்துவிட்டுச் சரியாகப் பத்து மணிக்குக் குறிப்பேடுகளையும் சிட்டாக்களையும் கோப்புக்களையும் தன் மேசையின் மீது பரப்பி வைத்துக்கொள்வான் ந. ஒவ்வொரு கடனாளியின் பெயருக்கு எதிராகவும் நிலுவையில் உள்ள அசல், வட்டித்தொகையைக் கணக்கிட்டுத் தவணைத்தேதியைக் குறித்து வைத்துக்கொள்வான். யாராவது கடன் கேட்டு வந்தால் பொது மேலாளர் வரும்வரை காத்திருக்கச் சொல்வான். கடனைத் திருப்பிச் செலுத்த வருபவர்கள் அபூர்வம். அது நிகழ்ந்துவிட்டால் ந நிலைகொள்ளாதவனாகிவிடுவான். வந்தவரை வரவேற்றுத் தனக்கெதிரில் உள்ள நாற்காலியில் உட்காரவைத்து அவர் கொடுக்கும் தொகையை மிகப் பணிவாக வாங்கி ஒருமுறைக்கு மூன்றுமுறை எண்ணிக் கணக்கிட்டுச் சிறிய கட்டாகக் கட்டி இழுப்பறைக்குள் வைத்துப் பூட்டிக்கொண்டு ரசீது எழுதித் தருவான். சில தருணங்களில் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருக்கும் இருபத்து நான்கு இயக்குநர்களில் யாராவது சிலர் இரண்டு, மூன்று பேர் கொண்ட குழுக்களாகக் கடைக்கு வருகை தருவார்கள். நிதிநிறுவனத்தின் அப்போதைய நிலை குறித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பும் மேலாளர் நவுக்கு இருந்தது. கீழ்த்தளத்திலிருந்த பேக்கரியிலிருந்து தேநீரும் சிகரெட்டுக்களும் வரவழைத்து அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். நிதிநிறுவனத்தோடு தொடர்பற்றவையே என்றாலும் அவர்கள் பேசுபவற்றைக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

    பொது மேலாளர் வந்த பிறகு சிட்டையை எடுத்துக்கொண்டு வசூலுக்குப் புறப்படுவான் ந. கடனாளிகளைக் கெஞ்சியோ பொது மேலாளரின் சார்பாகவும் மற்ற இயக்குநர்களின் சார்பாகவும் மிரட்டியோ ஒரு சொற்பத்தொகையைப் பெற்றுக்கொண்டு திரும்புவான். வசூல் பொதுமேலாளரின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பையாவது பூர்த்திசெய்யாவிட்டால் ந அவரது கடுங்கோபத்தையும் வசைகளையும் எதிர்கொள்ள வேண்டுமென்பதால் வசூலுக்குப் போகும்போது ந தன் எளிய இயல்புகளைக் கைவிட வேண்டியிருக்கும். கடனாளிகளின் மீது வசைமாரி பொழிய வேண்டியிருக்கும். வீட்டுக்குள் புகுந்து அவர்களுடைய ட்ரங்பெட்டியையோ இரும்பு அலமாரியையோ நாற்காலிகளையோ சைக்கிள், மொபெட் முதலான இருசக்கர வாகனங்களையோ பெண்களின் காதுகளில் இருக்கும் அழுக்கேறிய இரண்டு கிராம் தங்கத்தையோ குழந்தைகளின் வெள்ளி அரைஞாண் கயிறுகளையோ பறிமுதல் செய்துகொண்டு போய்விடப்போவதாக மிரட்ட வேண்டியிருக்கும். எதுவுமே இல்லாதபோது ந சங்கடமாக உணர்வான். அப்போது கடனாளியின் தன்மானத்தைச் சிதைக்கும் விதத்தில் வசைபாட வேண்டியிருக்கும், வாங்கறப்ப இருக்கற ஒணத்தி குடுக்கறப்பமு இருக்கோணு என்றோ, அப்பற அதுக்கு வக்கில்லாம எதுக்கு வாய இளுச்சுக்கிட்டு வந்து வாங்கறே? என்றோ, மரியாதையாப் பொழுதுக்குள்ள வாங்குன பணத்தக் கொண்டாந்து எண்ணி வெச்சுப்புட்டு வேற வேலயப் பாரு, அப்பற வாயில பேசிக்கிட்டிருக்கமாட்டெ ஆமா என்றோ ந தனக்குச் சொந்தமில்லாத பல சொற்களால் அவர்களை அவமானப்படுத்தவும் மிரட்டவும் முற்படுவான். வசூலை முடித்துக்கொண்டு திரும்பிப் பொது மேலாளரிடம் கணக்குகளை ஒப்படைத்துவிட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் சொன்ன தகுமானங்களைப் பற்றி அவருக்குச் சொல்வான். பொது மேலாளர் நகத்தைக் கடித்தபடியோ மீசையைத் தடவியபடியோ மேசையின் மீது இருக்கும் பேப்பர்வெயிட்டை உருட்டியபடியோ வெற்றுத் தாளொன்றை எடுத்து வைத்துக்கொண்டு பால்பாயின்ட் பேனாவால் எதையாவது கிறுக்கியபடியோ பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருப்பார். பெருமூச்சு விடுவார். முகபாவங்களை அடிக்கடி மாற்றிக்கொள்வார். குவளையிலிருந்து கொஞ்சம் தண்ணீரைக் கண்ணாடித் தம்ளர் ஒன்றில் சரித்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு மிடறாக விழுங்குவார்.

    பிறகு அவன் என்னென்ன வசைகளைக் கடன்தாரர்களின் மீது பிரயோகித்தானோ அந்த வசைகளை அப்படியே தன்னிடம் சொல்லும்படி கேட்பார் பொது மேலாளர். எச்சிலைக்கூட்டி விழுங்கிக்கொண்டு மிகத் தயக்கத்துடன் அவர்கள்மீது தான் பிரயோகித்த வசைகளைப் பற்றிச் சொல்வான் ந. பொது மேலாளருக்கு அவை எப்போதுமே திருப்தியளித்ததில்லை, அதெல்லாம் பத்தாது என முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு சொல்வார், அவுனுககிட்டயெல்லா பேசற வழில பேசுனாத் தன்னப்போல கொண்டாந்து குடுத்துப்புட்டுப் போயிருவானுக என அவனுக்கு மேலும் சில புதிய, கடனாளிகளின் மானத்தை இன்னும் மோசமாக வாங்கும் கெட்டவார்த்தைகளடங்கிய வசைகளைப் போதிப்பார். சிலதருணங்களில் தனது நாற்காலியிலிருந்து எழுந்து தனக்கெதிரே மிகப் பணிவான ஒரு மனிதனாக நின்றுகொண்டிருக்கும் ந வைத் தனது கடனாளிகளில் ஒருவனாகப் பாவித்துக்கொண்டு வசைபாடுவார்.

    ந வுக்கு வியர்த்துக்கொட்டும். பிறகு அந்தக் கெட்டவார்த்தைகளை மனதில் இருத்திக்கொண்டு மறுபடியும் மாலை ஐந்துமணிக்கு வசூலுக்குப் புறப்படுவான். அவற்றில் சிலவற்றை அவர்கள் மீது பிரயோகிப்பான். கிடைத்ததைப் பெற்றுக்கொண்டு ஏழுமணிக்குத் திரும்பிவருவான். மறுபடியும் பொது மேலாளரின் கோபத்துக்கும் வசைகளுக்கும் உள்ளாவான். பிறகு குறிப்பேடுகளிலும் பேரேடுகளிலும் அன்றைய வரவு செலவுக் கணக்குகளை எழுதி அவற்றைப் பூர்த்திசெய்து வைப்பான். அருகிலுள்ள கடைக்குப் போய்ப் பொது மேலாளரின் வீட்டுக்குத் தேவையான பழங்கள், காய் கனிகள், சில்லறைச் சாமான்களை வாங்கி வருவான். இரவு ஒன்பது ஒன்பதரை மணி வாக்கில் பொது மேலாளர் தன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போன பிறகு அவசர அவசரமாகக் கடையை இழுத்துப் பூட்டிவிட்டுப் பூட்டுக்கள் சரியாகப் பூட்டிக்கொண்டுள்ளனவா என்பதை தன் மெலிந்த கைகளால் இரண்டு மூன்று முறை பலங்கொண்ட மட்டும் இழுத்துப் பரிசோதித்துவிட்டு எங்குமே நிற்காமல் நேராக வீடு வந்துசேர்வான்.

    அந்தப் பணிகளுக்காகத் தனக்கு மாதாந்திர ஊதியமாகக் கிடைத்துவந்த சொற்பத் தொகையை அதிலிருந்து அநேகமாக எதையும் எடுத்துக்கொள்ளாமல் தாயிடம் கொடுத்துவந்தான் ந.

    தாய் பொறுப்பானவள். குடும்பத் தேவைகளுக்காக அதிலிருந்து எவ்வளவு குறைவாகச் செலவிட முடியுமோ அவ்வளவு குறைவாகச் செலவிடுவாள். மிஞ்சிய தொகையைக் கொண்டு ஊரில் இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஏலச்சீட்டு ஒன்றுக்குப் பணம் கட்டிவந்தாள். எப்பாடு பட்டாவது மகனின் கல்யாணத்துக்கும் பாழடைந்துபோய்விட்ட தனது வீட்டைச் செப்பனிடுவதற்கும் ஒரு கணிசமான தொகையைச் சேர்த்துவிட வேண்டுமென்பது அவளது கனவு.

    4

    தன் உறவினர்களும் நண்பர்களுமான சிலரைப் பார்த்து அவர்களைப் போல் தானும் அரசாங்க ஊழியனாக வேண்டுமென்னும் அந்தரங்கமான கனவை வளர்த்து வைத்துக்கொண்டிருந்தான் ந. மேல்நிலை வகுப்பில் தேர்ச்சிபெற்ற கையோடு தட்டச்சுப் பயின்றிருந்தான். தனக்கு ஆசிரியராயிருந்த தூரத்து உறவினர் ஒருவரின் ஆலோசனைகளின்படி நிதிநிறுவனத்தில் வேலை செய்துகொண்டே அஞ்சல்வழியில் இளங்கலைப் பட்டப்படிப்புப் பயில்வதற்கும் முயன்றான். வேலைப்பளு காரணமாக அந்த முயற்சியைப் பாதியிலேயே கைவிட வேண்டியதாயிற்று. எனினும் ந சோர்வடையவில்லை. சுருக்கெழுத்துக் கற்றுக்கொள்வதன் மூலம் வேலைக்கான வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ள முடியும் என யாரோ சொன்னதால் அதைக் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்தான். வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்தர் - தட்டச்சருக்கான தேர்வுகளையும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வுகளையும் எழுதிக் கொண்டிருந்தான். தூரத்து உறவினரான அந்த ஆசிரியர் அவனுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவறை எழுத்தராகப் பணிபுரியும் து என்னும் பெயரையுடைய ஒருவரை அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். அந்தப் பதிவறை எழுத்தரால் நிச்சயம் தனக்கு உதவமுடியும் என நம்பிய ந வாரம் தவறாமல் அவரைச் சந்தித்துக்கொண்டிருந்தான். அறிவுரைகளுக்காகவும் வழிகாட்டுதல்களுக்காகவும் அவரது வீட்டின் முற்றத்தில் இருந்த பூவரசமரத்தின் சிறிய நிழலில் பல மணி நேரங்கள்வரை பொறுமையாகக் காத்திருந்தான்.

    து என்னும் பெயரையுடைய அந்தப் பதிவறை எழுத்தர் அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் தாராளமாக வழங்கினார். செய்தித்தாள்களில் வரும் வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை அவன் தொடர்ந்து கவனித்துவர வேண்டும் என அறிவுறுத்தினார். குறிப்பிட்ட வேலைக்கு அவன் தகுதியானவனாக இருக்கும்பட்சத்தில் தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வுகளிலோ நேர்முகத் தேர்வுகளிலோ கலந்துகொள்ள வேண்டியிருந்தால் அதற்குத் தயாராக வேண்டும். பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். பொது அறிவை வளர்க்கும் புத்தகங்கள் சந்தையில் ஏராளமாக இருக்கின்றன. ந அவற்றில் ஒன்றையும் விட்டுவிடாமல் படிக்க வேண்டும். பதில்களை நெட்டுருப் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வில் ஒரு கேள்வி கேட்கப்படும்போது டக்கெனப் பதிலளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ந அந்தப் பதிவறை எழுத்தரின் அறிவுரைகளைத் தவறாமல் பின்பற்றிக்கொண்டு வந்தான். பொது அறிவுப் புத்தகங்களையும் வழிகாட்டி நூல்களையும் தேடிப்பிடித்து வாங்கிக்கொண்டு வந்தான். அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நான்காம்நிலைப் பணியாளர்களுக்கான தேர்வை ஐந்துமுறையும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வை ஏழுமுறையும் எழுதினான். நான்கு நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொண்டான். கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் அநேகமாகச் சரியான பதில்களையே சொன்னான். தேர்வு முடிவுகளுக்காகவும் பணிநியமன ஆணைக்காகவும் மாதக்கணக்காகவும் வருடக்கணக்காகவும் காத்திருக்கப் பழகிக்கொண்டான்.

    நிதிநிறுவனம் சார்ந்த பணிகளுக்காக ஏதாவதொரு அரசு அலுவலகத்திற்குப் போக வேண்டியிருக்கும்போது ந தன்னை அதன் எழுத்தர்களில் ஒருவராகக் கற்பனை செய்துகொள்வதற்குப் பழகிக்கொண்டிருந்தான். என்ன காரணத்தாலோ அவனால் தேர்வுகள் எதிலும் வெற்றிபெற முடியவில்லை. கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் சரியான பதில்களை அளித்திருந்தபோதிலும் எல்லா நேர்காணல்களிலும் தோல்விகளையே தழுவினான். பிறகு து என்னும் பெயரையுடைய வேலைவாய்ப்பகப் பதிவறை எழுத்தரின் இடையறாத முயற்சியின் காரணமாகத் தனக்குச் சத்துணவு அமைப்பாளர் பதவி கிடைத்தபோது ந தன்னை ஓர் அரசுப் பணியாளன் என நம்ப விரும்பினான். வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து தான் வசிக்கும் ஓ என்னும் பெயரையுடைய கிராமத்திலிருந்து வெறும் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலிருந்த தா என்னும் ஊரிலிருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் பதவிக்கான

    Enjoying the preview?
    Page 1 of 1